ADDED : பிப் 17, 2025 01:27 AM

-சென்னை: முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, தி.மு.க.,வின் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில், நேற்று முன்தினம் துவங்கி, நேற்று நிறைவடைந்தது.
ஆண்களில், தி.மு.க.,வின் அயலக அணி, எம்.எல்.ஏ.,க்கள் அணி, தலைமை கழக அணி, சுற்றுச்சூழல் அணி உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றன.
அதேபோல் பெண்களில், மகளிர் 'ஏ' மற்றும் 'பி' அணிகள், மேயர் பெண்கள் உட்பட நான்கு அணிகள் பங்கேற்றன.
நேற்று காலை 9:00 மணிக்கு நடந்த பெண்களுக்கான போட்டியில், மேயர் பிரியா தலைமையிலான மேயர் பெண்கள் அணி மற்றும் தி.மு.க., மகளிர் 'பி' அணிகள் எதிர்கொண்டன.
'டாஸ்' வென்ற மேயர் பிரியா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. நான்கு ஓவரை மேயர் பிரியா வீசி, டென்ஷன் ஆகவே விளையாடினார். தி.மு.க., மகளிர் அணி ஏழு விக்கெட் இழந்து 34 ரன்கள் அடித்தது.
அடுத்து களமிறங்கிய மேயர் பெண்கள் அணியில், மேயர் பிரியா, ஒரு ரன் கூட அடிக்காமல், 4வது பந்தில் 'போல்ட்' விக்கெட்டில் ஆட்டமிழந்தால், ரசிகர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
தன் விக்கெட்டை இழந்தபோது, இது 'நோபால்' என கேட்டு, அம்பயரிடம் அப்பாவியாக பிரியா அடம் பிடித்தார். பெண்களுக்கான போட்டி துவக்க முதலே, வாக்குவாதத்திலேயே சென்றது.
அனைத்து போட்டிகள் முடிவில், ஆண்கள் பிரிவில் விளையாட்டு மேம்பாட்டு அணி, 72 வித்தியாசத்தில் தகவல் தொழில்நுட்ப அணியை விழ்த்தி, 'சாம்பியன்' பட்டத்தை தட்டி சென்றது.
அதேபோல் பெண்கள் பிரிவில், தகவல் தொழில் நுட்ப அணி, தி.மு.க., மகளிர் 'பி' அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.