/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உள்ளாட்சிகளில் கட்டட அனுமதி தாமதமாவதை தவிர்க்க நடவடிக்கை
/
உள்ளாட்சிகளில் கட்டட அனுமதி தாமதமாவதை தவிர்க்க நடவடிக்கை
உள்ளாட்சிகளில் கட்டட அனுமதி தாமதமாவதை தவிர்க்க நடவடிக்கை
உள்ளாட்சிகளில் கட்டட அனுமதி தாமதமாவதை தவிர்க்க நடவடிக்கை
ADDED : பிப் 15, 2024 12:56 AM
சென்னை, சென்னை பெருநகரில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கட்டுமான அனுமதி கோப்புகள் தாமதமாவதைத் தவிர்க்க, ஒப்பந்த அடிப்படையில் வல்லுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
சென்னையில் 10,000 சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு, சி.எம்.டி.ஏ., எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் வழங்கி உள்ளது.
மாநகராட்சி, நகராட்சிகளில் நகரமைப்பு வல்லுனர்கள் இருப்பதால், இதற்கான விண்ணப்ப ஆய்வு பணிகளில் சிக்கல் எழுவதில்லை.
ஆனால், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் கட்டுமான திட்ட அனுமதி கோப்புகளை ஆய்வு செய்வதில் சிக்கல் எழுகிறது. இதற்காக, சி.எம்.டி.ஏ.,வில் இருந்து திட்ட உதவியாளர்கள் அயல்பணி அடிப்படையில் அனுப்பப்படுகின்றனர்.
இதில், உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் ஆதிக்கம் காரணமாக, திட்ட உதவியாளர்கள் செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும், பெரும்பாலான திட்ட உதவியாளர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகத்துக்கு செல்வதைத் தவிர்த்து, எழும்பூர் சி.எம்.டி.ஏ., அலுவலகத்துக்கு கோப்புகளை வரவழைத்து ஆய்வு செய்கின்றனர்.
ஊராட்சிகளில் நகரமைப்பு வல்லுனர் பணியிடங்களை உருவாக்க, ஊரக வளர்ச்சி துறைக்கு சி.எம்.டி.ஏ., கடிதம் எழுதியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், ஊராட்சிகளில் கட்டுமான திட்ட அனுமதி கோப்புகளை ஆய்வு செய்யும் பணிக்காக, நகரமைப்பு வல்லுனர்கள், கட்டுமான பொறியாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்களை ஒப்பந்த முறையில் நியமிக்க சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
சி.எம்.டி.ஏ.,வில் சமீப காலமாக பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த முறையில் வல்லுனர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த வகையில், திட்ட உதவியாளர்களுக்கு பதிலாக ஒப்பந்த முறையில் வல்லுனர்களை உள்ளாட்சிகளுக்கு அனுப்ப சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான ஒப்பந்த முறை வல்லுனர் தேர்வுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதன் வாயிலாக உள்ளாட்சிகளில் உரிய காலத்தில் கட்டுமான திட்ட அனுமதி கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

