/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காதலின் இன்பத்தை பரிமாறிய மீனாட்சி
/
காதலின் இன்பத்தை பரிமாறிய மீனாட்சி
ADDED : டிச 29, 2025 07:03 AM

சிவனின் பாதியான பார்வதியை பற்றிய 'சிருங்கார லஹரி'யை வைத்து, நாட்டிய நிகழ்ச்சியை நிகழ்த்தினார் மீனாட்சி சித்ர ரஞ்சன்.
பார்வதியின் நடை அழகு, கொடி இடை, சிவனை பார்த்ததும் வரும் வெட்கத்தை காட்டியதோடு அல்லாமல், பார்வதி அணிந்திருக்கும் மாலையில் பூக்களை மொய்க்கும் வண்டு களைக் கூட தன் நாட்டியத்தில் அவர் காட்டியது, ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தது.
பலரும், 'உசேனி ஸ்வரஜதி' தெலுங்கு வரிகளில் நாட்டியம் அமைப்பர். அதை விடுத்து, 'எந்த மாயக்காரியோ' என்ற தமிழ் வரிகளுக்கு நடனத்தில் வடிவம் அளித்தார். 'நான் நேசிக்கும் உன்னை, எந்த மாயக்காரியோ வசியம் செய்து விட்டாள்' என, நாயகனிடம் நாயகி புலம்புகிறாள்.
'சிருங்கார நடை நடந்து மயக்கினாலா அல்லது வலைவீசி மீன்பிடிப்பதை போல் உன்னையும் பிடித்துக்கொண்டாளா? என்ன ஜாலம் செய்தாளோ... குடிப்பதில் வசிய மருந்து கலந்து கொடுத்துவிட்டாளோ? அவளுக்கு இப்படி 'ஜால்ரா' போடுகிறீர்கள்' என்பதை அபிநயத்தில் ஆதங்கத்தையும், கோபத்தையும் மாறி மாறி காட்டினார்.
இவரின் அனுபவத்தால் இதை எளிதாக செய்ய முடிந்துள்ளது.
இறுதியாக 'கீத கோவிந்தம்' பாடலான அஷ்டபதி ராகமாலிகையில், ராதா - கிருஷ்ணனின் காதலை சுட்டிக்காட்டினார். அஷ்டபதியை அடுக்கடுக்காக தன் அபிநயத்தால் படிநிலை செய்து விளக்கினார்.
கண்ணன் வருகைக்காக ராதா காத்திருக்கிறாள். அவர் வராமல் போக துயரத்தையும், விரகத்தையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள்.
அப்போது தாமதமாக வரும் கண்ணன் மீது ராதா கோபம் கொள்வதோடு, முகத்தில் கவலையை ஓடவிடுகிறாள்.
அதை பார்த்ததும் தாங்க முடியாத கண்ணன், கெஞ்சுகிறான்; கொஞ்சுகிறான். தோப்புக்கரணம் போட்டும் அவள் மாறவில்லை.
கடைசியில் அவளது காலில் விழுந்துவிட, முகத்தில் சிரிப்பை ராதா கொண்டுவந்துவிட, இருவரும் கொஞ்சி குழாவுகின்றனர். இந்த காட்சியில் இன்பத்தை அட்டகாசமாக வெளிப்படுத்தினார்.
பாண்டியன் - நட்டுவாங்கம், கோமதி நாயகம் - பாட்டு, சக்திவேல் - மிருதங்கம், கலையரசன் - வயலின், தேவராஜ் - குழல் ஆகியோரது ஒத்துழைப்பால், மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் கச்சேரி களைகட்டியது.
- மா.அன்புக்கரசி

