/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சரவணா ஸ்டோர்ஸில் திருடிய தாய், மகள் சிக்கினர்
/
சரவணா ஸ்டோர்ஸில் திருடிய தாய், மகள் சிக்கினர்
ADDED : ஆக 25, 2025 05:32 AM
போரூர்: போரூர் சரவணா ஸ்டோர்ஸில், கவரிங் நகைகளை திருடிய தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர்.
போரூரில் சரவணா ஸ்டோர்ஸ் கடை உள்ளது. இந்த வளாகத்தின் ஆறாவது மாடியில், கவரிங் நகைகள் விற்பனை பகுதி உள்ளது. அங்கு, நேற்று முன்தினம் இரவு வந்த இரு பெண்கள், கவரிங் நகைகளை பார்ப்பதுபோல், ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி, வளையல், நெக்லஸ், ஆரம் உள்ளிட்ட கவரிங் நகைகளை திருடினர்.
சேலை அணிந்த வந்த இருவரும், உள்ளே அணிந்திருந்த பேண்டிற்குள், நகைகளை மறைத்தனர்.
இதை, கண்காணிப்பு கேமரா வாயிலாக பார்த்த மேற்பார்வையாளர் செல்லப்பாண்டி, ஊழியர்களுடன் சென்று இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து, 30,000 ரூபாய் மதிப்புள்ள கவரிங் நகைகளை பறிமுதல் செய்தனர். இருவரையும் போரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுவாதி, 54, அவரது மகள் சொர்ணா, 35, என்பதும், ராமாபுரத்தில் தங்கியுள்ளதும் தெரியவந்தது. ஏற்கனவே இதுபோல் திருட முயற்சித்து, எச்சரித்து அனுப்பப்பட்டவர்கள் என்பதும், அப்போது, இவர்களின் புகைப்படங்களை கணினியில் பதிவு செய்து வைத்திருந்ததால், கண்காணிப்பு கேமரா வாயிலாக சிக்கியதும் தெரிய வந்தது.
கவரிங் நகைகளை திருடி, வெளி நிகழ்ச்சிகளில் வாடகைக்கு விட்டதோடு, தங்க நகை என அடகு வைத்து பணம் பெற முயற்சி செய்ததும் தெரியவந்தது. தாய், மகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

