/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நர்ஸ் திடீர் உயிரிழப்பு தாய் போலீசில் புகார்
/
நர்ஸ் திடீர் உயிரிழப்பு தாய் போலீசில் புகார்
ADDED : ஜன 21, 2025 12:54 AM

கூடுவாஞ்சேரி.
செங்கல்பட்டு, நந்திவரம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் ராஜி, 35. இவரது மனைவி சுமதி, 31. இவர், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை சுமதி துணியை 'அயர்ன்' செய்யும்போது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
உறவினர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், அவர் இறந்தது தெரியவந்தது.
கூடுவாஞ்சேரி போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் சுமதியின் தாய் மல்லிகா, 57, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார்.
அதில், 'என் மகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால், அவளது கணவர் ராஜி, மாமியார் எஸ்தர், மைத்துனர் ஜோசப், அவரது மனைவி ரமணி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து, கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
அவளது உடலில் காயங்கள் உள்ளன. எனவே, விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

