ADDED : அக் 18, 2026 08:03 PM
கோடம்பாக்கம் மண்டலம், கே.கே.நகரில் பாரதிதாசன் காலனியில், ஒவ்வொரு மழைக்கும் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படும். இப்பிரச்னைக்குத் தீர்வு காண, கடந்த ஆண்டு 1.5 கி.மீ., துாரத்திற்கு 6.83 கோடி ரூபாயில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. மழைநீர் வெளியேற்ற மின் மோட்டார் அறைகளும் பொருத்தப்பட்டன.
நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், பாரதிதாசன் காலனி சாலை மற்றும் குடியிருப்புகளில், மழைநீர் மீண்டும் தேங்கியது. மழைநீரை வெளியேற்றுவதற்கான மோட்டார்கள் இயக்கப்படாததால், வடிகால் அமைத்தும் தண்ணீர் வெளியேறவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, யாரும் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த 138வது வார்டு கவுன்சிலர் மற்றும் அப்பகுதி மக்கள், அங்கிருந்த மின்மோட்டார் அறையின் பூட்டை உடைத்து, மோட்டாரை இயக்கினர். இதையடுத்து, குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் படிப்படியாக வடிந்தது.
