/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருத்துவ காப்பீட்டு முன்பணம் தர முடியாது அடம்பிடிக்கும் எம்.ஆர்.எப்., ஆலை நிர்வாகம் 10வது நாளாக தொடரும் தொழிலாளர் போராட்டம்
/
மருத்துவ காப்பீட்டு முன்பணம் தர முடியாது அடம்பிடிக்கும் எம்.ஆர்.எப்., ஆலை நிர்வாகம் 10வது நாளாக தொடரும் தொழிலாளர் போராட்டம்
மருத்துவ காப்பீட்டு முன்பணம் தர முடியாது அடம்பிடிக்கும் எம்.ஆர்.எப்., ஆலை நிர்வாகம் 10வது நாளாக தொடரும் தொழிலாளர் போராட்டம்
மருத்துவ காப்பீட்டு முன்பணம் தர முடியாது அடம்பிடிக்கும் எம்.ஆர்.எப்., ஆலை நிர்வாகம் 10வது நாளாக தொடரும் தொழிலாளர் போராட்டம்
ADDED : செப் 22, 2025 03:12 AM

திருவொற்றியூர்: தொழிலாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு முன் பணத்தை வழங்க முடியாது என, எம்.ஆர்.எப்., தொழில்சாலை நிர்வாகம் அடம்பிடித்து வருவதால், தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம், 10 நாட்களாக நடந்து வருகிறது.
திருவொற்றியூர் விம்கோ நகரில், எம்.ஆர்.எப்., டயர் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, 61 பயிற்சியாளர்கள் உட்பட, 820 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வரும், 61 பயிற்சி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். என்.ஏ.பி.எஸ்., எனும் தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என, எம்.ஆர்.எப்., தொழிற்சங்கம் வலியுறுத்தி வருகிறது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 6ல், எம்.ஆர்.எப்., தொழிலாளர் சங்கத்தினர், தலைவர் எழில் கரோலின் தலைமையில், ஒரு நாள் பட்டினி போராட்டம் நடத்தினர்.
ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் குடும்ப மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். தொழிலாளர் ஒருவருக்கு, தலா, 16,000 ரூபாய் என, திட்டத்திற்கு, 1.20 கோடி ரூபாய் செலவாகும்.
இந்த தொகையை, தொழிற்சாலை நிர்வாகம் வழங்கி, பின் தொழிலாளர் சம்பளத்தில் பல தவணைகளாக பிடித்தம் செய்து கொள்ளும். இந்த நடைமுறை, 21 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊழியர்களுக்கான காப்பீட்டுக்கான முன்பணத்தை தர, எம்.எப்.எல்., நிர்வாகம் மறுத்துவிட்டது. இதன் காரணமாக காப்பீடு பெற முடியாமல் தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எம்.ஆர்.எப்., நிர்வாகத்தின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்., 10ல் ஊழியர்கள் இரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதை காரணம் காட்டி, தொழிலாளர்களுகான பேருந்து சேவை மற்றும் கேன்டீன் வசதிகளை நிர்வாகம் நிறுத்தியுள்ளது. இதனால் ஊழியர்கள், 12ம் தேதி முதல் தொழிற்சாலை வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, எம்.ஆர்.எப்., நிர்வாகம் கதவடைப்பு செய்தது. இதனால், வாயில் முன் தொழிலாளர் போராட்டம் தொடர்ந்தது.
இதற்கிடையில், வாயில் முன் போராட்டம் நடத்த, எம்.ஆர்.எப்., நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளது. இதனால், வாயில் முன் ஊழியர்கள் கூடாத வகையில், இரும்பு தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
வேறு வழியின்றி ஊழியர்கள், விம்கோ நகர் மார்க்கெட் பகுதியில் உள்ள, சி.ஐ.டி.யு., அலுவலகம் அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊழியர்களின் போராட்டம் 10வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
சம்பளம் தர மறுப்பு
'நிர்வாகத்துடன் தொழிலாளர்கள் இணக்கமாக இல்லாமல் எதிரான நிலைப்பாட்டை எடுத்து போராடி வருகின்றனர். எனவே, பணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் வழங்க வாய்ப்பில்லை' என, எம்.ஆர்.எப்., நிர்வாகம் தெரிவித்துள்ளது.
'போராட்டத்தை நாங்கள் நடத்தவில்லை; போராட்டத்தை நிர்வாகம்தான் நடத்த வைத்துள்ளது. எனவே, சம்பளத்தை தந்தாக வேண்டும்' என, தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
பிரச்னை என்ன? எம்.ஆர்.எப்., நிர்வாகம், என்.ஏ.பி.எஸ்., எனும் தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தை அமல்படுத்த உள்ளது. இதன்படி, வாலிபர்கள் ஊக்கத்தொகை பெற்று, மூன்றாண்டுகள் தொழிற்பயிற்சியில் சேர்ந்த பணியாற்றலாம். மூன்று ஆண்டுகள் முடிந்ததும், பயிற்சி தொழிலாளர்கள் வெளியேறிவிடுவர். அடுத்து, மீண்டும் பயிற்சி தொழிலாளர்கள் சேர்க்கப்படுவர். இந்த திட்டத்தை ஏற்கவேண்டுமென தொழிலாளர்களுக்கு, நிர்வாகம் தரப்பில் அழுத்தம் கொடுத்து வருகிறது. இவ்வாறு செய்வதால், நிரந்த பணியாளர்கள் தேவைப்படாத சூழல் ஏற்படும்; இருப்பவர்களுக்கு வேலை பறிபோகுமாே என்ற அச்சத்தில், தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நிர்வாகம்தான் போராட வைத்தது ''ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு முன்பணத்தை வழங்க, நிர்வாகம் மறுத்து விட்டது. அந்த பணத்தை தர வேண்டும். பயிற்சியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். நாங்கள் போராடவில்லை. நிர்வாகம்தான் எங்களை போராட்டத்திற்கு தள்ளிவிட்டுள்ளது. எனவே, பத்து நாட்களுக்கான சம்பளத்தை சட்டபூர்வமாக எங்களுக்கு வழங்க வேண்டும். - எம்.குமார், 43, இணை செயலர், எம்.ஆர்.எப்., தொழிலாளர் சங்கம்.