ADDED : ஆக 14, 2025 12:24 AM
ஆதம்பாக்கம்: டி.என்.ஜி.ஓ., காலனியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய, மயிலாடுதுறையைச் சேர்ந்த மணி, 35, என்பவர், மூன்று மாதங்களாக இரவுப்பணியில் இருந்துள்ளார். நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்து, மது அருந்திவிட்டு படுத்த அவர், காலையில் மூக்கில் நுரை மற்றும் ரத்தம் வந்த நிலையில் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய ஆதம்பாக்கம் போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
1,100 கிலோ குட்கா பறிமுதல்
ஆவடி: வீராபுரம், அந்தோணி யார் நகரில் சோதனை நடத்திய ஆவடி டேங்க் போலீசார், தகர ஷீட் அறையில், 1,100 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த, உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார், 33, என்பவரை கைது செய்தனர். அவர், பெங்களூரில் இருந்து கன்டெய்னர் லாரியில் குட்கா கடத்தி வந்ததும், அதன் மதிப்பு, 5 லட்சம் ரூபாய் எனவும், போலீசார் தெரிவித்தனர்.
கடையில் ஊழியர் கைவரிசை
சூளைமேடு: சூளைமேடு காமராஜர் தெருவில் கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்தும் கடை நடத்தி வருபவர் அப்துல் கரீம், 24. கடந்த 4ம் தேதி இரவு, கடையை உடைத்து, மடிக்கணினி மற்றும் 1.50 லட்சம் ரூபாய் திருடப் பட்டிருந்தது. விசாரித்த சூளைமேடு போலீசார், திருட்டில் ஈடுபட்ட கடை ஊழியரான எம்.கே.பி., நகரைச் சேர்ந்த சரத்குமார், 32, என்பவரை கைது செய்து, 1.48 லட்சம் ரூபாய், மடிக்கணினியை பறிமுதல் செய்தனர்.