/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடுகளுக்கான இயற்கை எரிவாயு வினியோக திட்டம்... விரிவாக்கம்! 280 கி.மீ., 'பைப் லைன்' பதிக்க மத்திய அரசு அனுமதி
/
வீடுகளுக்கான இயற்கை எரிவாயு வினியோக திட்டம்... விரிவாக்கம்! 280 கி.மீ., 'பைப் லைன்' பதிக்க மத்திய அரசு அனுமதி
வீடுகளுக்கான இயற்கை எரிவாயு வினியோக திட்டம்... விரிவாக்கம்! 280 கி.மீ., 'பைப் லைன்' பதிக்க மத்திய அரசு அனுமதி
வீடுகளுக்கான இயற்கை எரிவாயு வினியோக திட்டம்... விரிவாக்கம்! 280 கி.மீ., 'பைப் லைன்' பதிக்க மத்திய அரசு அனுமதி
UPDATED : ஏப் 19, 2025 06:57 AM
ADDED : ஏப் 18, 2025 11:39 PM

சென்னை: சென்னையில் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் திட்டத்தை விரிவாக்கும் வகையில், எண்ணுார் முதல் திருவான்மியூர் வரை, பல்வேறு சாலைகளில் பூமிக்கடியில், 280 கி.மீ., துாரம், 'பைப் லைன்' அமைக்க, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசு, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைக்க, இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது.
கர்நாடகா, குஜராத், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பது போல், தமிழகத்திலும், 'பைப் லைன்' எனப்படும் குழாய் வழித்தடத்தில், வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
33 லட்சம் வீடுகள்
பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம், எண்ணுார் துறைமுக வளாகத்தில், எல்.என்.ஜி., எனப்படும் திரவ நிலை இயற்கை எரிவாயு முனையம் அமைத்துள்ளது.
இதற்கு, வெளிநாடுகளில் இருந்து கப்பலில் திரவ நிலை எரிவாயு எடுத்து வரப்படுகிறது.
இது, வாகனங்களுக்கு சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு, வீடுகளுக்கு பி.என்.ஜி., எனப்படும், 'பைப்டு நேச்சுரல் காஸ்' என்ற பெயரில் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயுவாக வினியோகம் செய்யப்படுகிறது.
வரும், 2030க்குள், 2.30 கோடி வீடுகளுக்கும், 2,785 சி.என்.ஜி., மையங்கள் வாயிலாக வாகனங்களுக்கும் எரிவாயு வினியோகிக்க வேண்டும். இந்த பணிக்கு மாநிலம் முழுதும், 'சிட்டி காஸ் டிஸ்ட்ரிபியூஷன்' எனப்படும், ஏழு மின் காஸ் வினியோக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னையில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணியை, 'டோரண்ட் காஸ்' நிறுவனம் மேற்கொள்கிறது.
மொத்தம், 33 லட்சம் வீடுகளுக்கும், 222 சி.என்.ஜி., மையங்கள் வாயிலாக வாகனங்களுக்கும் எரிவாயு வினியோகிக்க வேண்டும். திட்ட செலவு, 5,000 கோடி ரூபாய்.
இதற்காக, சென்னை முழுதும் குழாய் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன் துவங்கிய இப்பணிகள், தொடர்ந்து நடந்து வருகின்றன. இதுவரை, 76 சி.என்.ஜி., மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஒப்புதல்
திருமங்கலம், அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, அண்ணாநகர், கோயம்பேடு, அசோக்நகர், புழல், அம்பத்துார் உள்ளிட்ட பணிகளில் குழாய் வழித்தடம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
கடலில் இருந்து, 500 மீட்டருக்கு வெளியில் உள்ள பகுதியில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு, கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை குழுமத்திடம் ஒப்புதல் பெற வேண்டும்.
எனவே, சென்னையில் கடற்கரைக்கு அருகில் உள்ள பகுதிகளில் குழாய் வழித்தடம் அமைக்க, கடலோர மண்டல மேலாண்மை குழுமத்திடம் அனுமதி கோரப்பட்டது.
எந்தெந்த பகுதி
அந்த ஆணைய பரிந்துரை அடிப்படையில், சென்னையில் கடற்கரைக்கு அருகில், 280 கி.மீ., துாரம் குழாய் வழித்தடம் அமைக்க, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இதன் வாயிலாக, எண்ணுார், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், பாரிமுனை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அடையாறு, திருவான்மியூர் வரை குழாய் வழித்தடம் அமைக்கும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளது.
இதனால், சென்னை முழுதும் பரவலாக, குழாய் வழியாக இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய முடியும்.