/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'இணையவழியில் தமிழ் வலம் வர தொழில்நுட்பத்தை கற்க வேண்டும்'
/
'இணையவழியில் தமிழ் வலம் வர தொழில்நுட்பத்தை கற்க வேண்டும்'
'இணையவழியில் தமிழ் வலம் வர தொழில்நுட்பத்தை கற்க வேண்டும்'
'இணையவழியில் தமிழ் வலம் வர தொழில்நுட்பத்தை கற்க வேண்டும்'
ADDED : ஜன 18, 2024 12:27 AM

''தமிழ் மொழி உலக மொழிகளுக்கு இணையாக இணையவழி யில் வலம் வர, தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்த வேண்டும்,'' என்கிறார், சேலம் பெரியார் பல்கலையின் இதழியல் மக்கள் தொடர்பி யல் துறை துணை பேராசிரியர் தமிழ்ப்பரிதி மாரி. இவர், விக்கிபீடியா, வலைப்பூ, இணையதளம் உள்ளிட்ட, உலக ஊடகங்களில் எழுதுவது குறித்த பயிற்சி அளிப்பவர். அவரிடம் பேசியதில் இருந்து...
அச்சு ஊடகம், இணைய ஊடகம் இவற்றில் தமிழின் நிலை?
உலக மொழிகளுடன் ஒப்பிடும்போது, தமிழ் இந்த இரண்டு ஊடகங்களிலும் பின்தங்கியே உள்ளது. இதுவரை தமிழில், நான்கு லட்சம் அச்சு நுால்கள் மட்டுமே வந்துள்ளன. மின்நுாலக தளத்திலும் மிகக்குறைந்தளவு தான் உள்ளன. அவற்றை அதிகரிக்க வேண்டியது நம் கடமை.
மின் நுால்களின் பயன்பாடு?
அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பங்கள் அசுர வேகத்தில் இயங்குகின்றன. நாம் கற்பதிலும், கற்பிப்பதிலும், அச்சு நுால்களை மட்டுமே நம்பி இருந்தால், அது நமக்கு பின்னடைவை தரும். அதனால் தான், மின்நுால்கள் தேவையாகின்றன.
மின்நுால்களை மொபைல் போன், டேப்லெட், லேப்டாப், கணினி, 'கிண்டில்' எனும் கையடக்க மின்நுாலக சாதனம் என, அனைத்து மின் சாதனங்களிலும் படிக்க முடியும். இவற்றில், லட்சக்கணக்கான நுால்களை சேமிக்க முடியும்.
மின் நுாலாக்கத்தில் உள்ள சவால்கள்?
முதலில், தமிழில் தட்டச்சு செய்வதற்கான மென்பொறியை நம் மின் சாதனத்தில் உள்ளீடு செய்வது, பின் தமிங்கிலத்தில் அல்லாமல் தமிழிலேயே தட்டச்சு செய்வது முக்கியம். பலர், தமிழை ஆங்கிலமாக தட்டச்சு செய்து, தமிழுக்கு மாற்றுகின்றனர். இதனால், எழுத்துப்பிழையும் கருத்துப்பிழையும் ஏற்படுகின்றன.
அப்படி தமிழில் தட்டச்சு செய்தபின், தனக்கென தனியா வலைப்பூ எனும் 'பிளாக்' அல்லது இணையதளத்தை உருவாக்கி, அதில் எழுத வேண்டும்.
முக்கியமாக, அறிவியலாளர்களும், படைப்பாளர்களும் இவ்வாறு செய்து, தங்களின் கருத்துகளை பதிவிட வேண்டும். ஆனால் அவர்கள், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழில்நுட்பத்தை கற்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் தான் இணையவெளியில் தமிழ் படைப்புகளுக்கு மிகப்பெரிய தேக்கம் ஏற்பட்டுள்ளது.
விக்கிபீடியாவில் எழுதுவது?
'விக்கிபீடியா' எனும் தளத்தில், உலக மொழியான ஆங்கிலத்தில், 66 லட்சம் கட்டுரைகள் உள்ள நிலையில் தமிழில் 1.66 லட்சம் கட்டுரைகள் தான் உள்ளன. அதிலும் தரமானவை மிகக்குறைவு.
விக்கிபீடியாவில் ஆளுமைகள், சுற்றுலா, புதினம், அறிவியல், வரலாறு என, எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், சாட் ஜி.பி.டி., எனும் செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலர் எழுதுகின்றனர். அதையும், இணையதளம் காட்டிக்கொடுத்து விடுகிறது. அதனால், மிகவும் சிரத்தையுடன் எழுத வேண்டும்.
அதற்கான பயிற்சி எப்படி?
கடந்த 15 ஆண்டுகளாக, பல கல்லுாரிகளில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறேன். 'mydictionary.in' என்ற இணையதளத்தையும் உருவாக்கி உள்ளேன். இதில், 63 அகராதிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
150 துறைகள் சார்ந்த 10 லட்சம் சொற்களுக்கான பொருளை அதில் தேடிக் கண்டறிய முடியும். அதுமட்டுமல்ல 30,000 பழமொழிகள், விடுகதைகள், தமிழின் மிகச்சிறந்த தரவு நுால்கள் உள்ளிட்டவற்றையும் அதில் பார்க்கலாம்.
மின் நுாலாக்க பணியில் தமிழகத் தமிழர்களின் செயல்பாடுகள்?
மிகக்குறைவாகவே உள்ளது. மின் நுாலாக்கம் பற்றி பேசுவோரே, மாவட்டத்துக்கு ஒருவர் என்ற நிலையில்தான் உள்ளனர். ஆனால், வெளிநாடுவாழ் தமிழர்கள் மின் நுாலாக்கத்தில் சிறப்பாக செயல்படுகின்றனர். அவர்களுக்கு தமிழ் உணர்வும், தேடி கண்டறியும் பசியும் அதிகம் உள்ளது.
நாம், நம் மொழியை உலக பயன்பாட்டுக்கு உயர்த்த, மின் நுாலாக்கம் முக்கியம். அதற்கு, தொழில்நுட்பங்களை கற்க வேண்டும். நான் கற்பிக்க தயாராகவே இருக்கிறேன்.
- நமது நிருபர் -