/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் கால்வாயான வடிகால் சுகாதார துறையினர் அலட்சியம்
/
கழிவுநீர் கால்வாயான வடிகால் சுகாதார துறையினர் அலட்சியம்
கழிவுநீர் கால்வாயான வடிகால் சுகாதார துறையினர் அலட்சியம்
கழிவுநீர் கால்வாயான வடிகால் சுகாதார துறையினர் அலட்சியம்
ADDED : நவ 10, 2024 09:17 PM
சென்னை:சிந்தாதிரிப்பேட்டையில், மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முன்பு, சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் மண்டலம் வாரியாக கணக்கெடுக்கப்பட்டு வந்தன.
கணக்கெடுக்கப்பட்ட சட்டவிரோத இணைப்புகளை, அந்தந்த சுகாதார ஆய்வாளர்கள் துண்டித்ததுடன், சம்பந்தப்பட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வந்தனர்.
காலப்போக்கில் இந்த நடவடிக்கையை மாநகராட்சி சுகாதார துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டதால், தற்போது சென்னையில் பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் கால்வாயாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை அருணாச்சலம் சாலையில், அவ்வப்போது மழைநீர் வடிகாலிலிருந்து கழிவுநீர் வெளியேறும்.
உடனே, மாநகராட்சி ஊழியர்கள் 'சூப்பர் சக்கர்' இயந்திரம் வாயிலாக கழிவுநீரை உறிஞ்சி அகற்றி வருகின்றனர்.
அதேபோல், எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள வடிகாலில் குடிநீர் வாரியத்தினரே மோட்டார் அமைத்து, பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீரை வெளியேற்றி, மழைநீர் வடிகாலில் விட்டு வருகின்றனர்.
வடிகால் முழுதும் கழிவுநீர் கால்வாயாக மாறியதால், கொசு தொல்லை அதிகரித்து வருவதோடு, துர்நாற்றமும் வீசி வருகிறது. முன்பெல்லாம் மழைநீர் வடிகாலில், கொசு மருந்து தெளிப்பது உண்டு.
தற்போது அந்த நடவடிக்கையும் மாநகராட்சியினர் மேற்கொள்வதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிகாலில் கொடுக்கப்பட்டுள்ள சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.