/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதிய கற்கால கருவிகள் பாலாற்றில் கண்டெடுப்பு
/
புதிய கற்கால கருவிகள் பாலாற்றில் கண்டெடுப்பு
ADDED : மே 29, 2023 01:50 AM

திருக்கழுக்குன்றம்:வல்லிபுரம் - ஈசூர் பாலாற்றுப் பகுதியில், புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக, கல் கோடரி உள்ளிட்ட கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
புதிய கற்கால மனிதர்கள் விவசாயம் செய்வதற்கும், விலங்குகளை வேட்டையாடவும், கல் கோடரி உட்பட, பல கற்கருவிகளை பயன்படுத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் - ஈசூர் பாலாற்றுப் படுகையில் இத்தகைய கருவிகள், கருவிகளை தீட்டும் மணற்பாறை உள்ளிட்டவை தற்போது கண்டறியப்படடுள்ளன.
பாலாற்றின் தென்கரை பகுதியில், ஆற்று மணல் சூழ்ந்திருந்தது. கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மணல் அடித்துச் செல்லப்பட்டு, அங்கிருந்த தரைமட்ட பாறைகள் வெளிப்பட்டன.
இதையடுத்து, ஆற்றங்கரை பகுதியில் கற்கால மனிதர்கள் வாழ்ந்தனரா என்பதை அறிய, செங்கல்பட்டு, வில்லியம்பாக்கம் பகுதி, தமிழர் தொன்மம் வரலாற்று ஆய்வு நடுவ அமைப்பாளர் மதுரைவீரன், அப்பகுதியில் ஆய்வு செய்தார்.
அப்போது, கல் கோடரி உள்ளிட்ட கற்கருவிகள், அவற்றை பட்டை தீட்ட பயன்படுத்தும் மணற்பாறை ஆகியவை இருப்பதை கண்டறிந்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
புதிய கற்காலத்தில் மனிதர்கள், விவசாய பணிகள் மற்றும் விலங்குகளை வேட்டையாட கற்கருவிகளை பயன்படுத்தினர்.
உறுதியான பாறை கற்களை, தேவைக்கேற்ற அளவில் மணற்பாறையில் தேய்த்து பட்டை தீட்டுவர்.வல்லிபுரம் - ஈசூர்ஆற்றங்கரை பகுதியில், இத்தகைய கற்கருவிகள்
கிடைத்தன.
மணல் அரித்து வெளிப்பட்ட மணற்பாறையில், கற்கருவிகளை தேய்த்த அடையாள குழிகள் உள்ளன. கல்லை தேய்க்கும் போது ஏற்படும் வெப்பம் தணித்து குளிர்விக்க, பாறையில் நீர் நிரப்பும் குழிகள் உள்ளன. அக்காலத்தில் ஆற்றின் போக்கு, சற்று வடபுறத்தில் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இப்பகுதியில், கற்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்துள்ளது, இதன் மூலம் உறுதியாகிறது. கற்கருவிகள் பற்றி படித்து அறிந்துள்ளோம். அவற்றை செய்தது குறித்த அடையாளமும் இங்கு காணப்படுகிறது. தொல்லியல் ஆர்வலர்கள் இதை ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.