/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகரில் ரூ.2,000 புதிய பஸ் பாஸ் அறிமுகம்
/
மாநகரில் ரூ.2,000 புதிய பஸ் பாஸ் அறிமுகம்
ADDED : மார் 20, 2025 12:24 AM

சென்னை, சென்னையில் 'ஏசி' உட்பட அனைத்து பஸ்களிலும் பயணிக்க வசதியாக 2,000 ரூபாய் மாதாந்திர பஸ் பாசை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிமுகம் செய்தார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் 50 'ஏசி' பஸ்கள் உட்பட 3,056 பஸ்கள் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படுகின்றன.
இவற்றில் 'ஏசி' பஸ்கள் தவிர்த்து இதர பஸ்களில் பயணிக்கும் வகையில் 320 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரையில் பாஸ்கள் வழங்கப்படுகின்றன.
இதற்கிடையே, 'ஏசி' பஸ்களிலும் பயணிக்கும் வகையில் பாஸ் அறிமுகம் செய்ய வேண்டும் என பயணியர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 2,000 ரூபாய் மதிப்பிலான மாதாந்திர புதிய பஸ் பாஸ் திட்டத்தை நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மந்தைவெளி பஸ் நிலையத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.
அவர் அளித்த பேட்டி:
இந்த ஆண்டு இறுதிக்குள் 225 மின்சார 'ஏசி' பஸ்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்நிலையில், 2,000 ரூபாய் பயண அட்டை திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 'ஏசி' பஸ்கள் உட்பட அனைத்து பஸ்களிலும் பயணிப்பதற்காக இந்த புதிய பாஸ் வழங்கப்படுகிறது. 1000 ரூபாய் மாதாந்திர பாஸ் பயன்பாட்டில் இருக்கும்.
சிக்னல்களில் பஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை பொருத்தவரை சாலை வசதிக்கேற்ப பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்டோ கட்டண உயர்வு தொடர்பாக அனைத்து சங்கங்களையும் அழைத்து பேச்சு நடத்தி உள்ளோம். அவர்களது கோரிக்கைகளை முதல்வர் கவனத்துக்கு எடுத்து சென்றிருக்கிறோம். இது தொடர்பாக முடிவு ஏற்படும் நேரத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பிரபுசங்கர், இணை மேலாண் இயக்குநர் நடராஜன், தொ.மு.ச., பேரவைத் தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.