/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
6 மாதமாக கிடப்பில் புது மினிபஸ் திட்டம் அரசு ஒப்புதலுக்காக அதிகாரிகள் காத்திருப்பு
/
6 மாதமாக கிடப்பில் புது மினிபஸ் திட்டம் அரசு ஒப்புதலுக்காக அதிகாரிகள் காத்திருப்பு
6 மாதமாக கிடப்பில் புது மினிபஸ் திட்டம் அரசு ஒப்புதலுக்காக அதிகாரிகள் காத்திருப்பு
6 மாதமாக கிடப்பில் புது மினிபஸ் திட்டம் அரசு ஒப்புதலுக்காக அதிகாரிகள் காத்திருப்பு
ADDED : ஜன 24, 2025 12:13 AM
சென்னை, தமிழகத்தில், தனியாரையும் ஈடுபடுத்தும் வகையில், மினி பேருந்துகள் சேவை திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.
இதற்கான, புதிய மினி பேருந்து வரைவு கொள்கை குறித்து, கடந்த ஆண்டு ஜூலை 21ல் உள்துறை செயலர் தலைமையில், சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற பெரும்பாலானோர், திட்டத்தை வரவேற்றனர். சிலர், 25 கி.மீ., துாரம் மினி பேருந்தை அனுமதிப்பது, அரசு டவுன் பேருந்துகளின் இயக்கத்தை பாதிக்கும்; துாரத்தை குறைக்க வேண்டும் என, அதிகாரிகளும், தொழிற்சங்கத்தினரும் அறிவுறுத்தினர்.
இந்த கூட்டம் முடிந்து, ஆறு மாதங்கள் ஆகி விட்டன. அடுத்தகட்ட முடிவு எதுவும் வெளியிடப்படவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்தினால், மாவட்டங்களில் கூடுதல் மினி பேருந்து வசதியும், சென்னையில் முதல் முறையாக தனியார் மினி பேருந்து வசதியும் கிடைக்கும்.
குறிப்பாக, திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில், மினி பேருந்து சேவை கிடைக்கும்.
இதுகுறித்து, திருநின்றவூர் ரயில் பயணியர் பொது நலச் சங்கச் செயலர் முருகையன் கூறியதாவது:
சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில், மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. ஆனால், பொது போக்குவரத்து போதிய அளவில் இல்லை. பயணியர் கூடுதல் கட்டணம் கொடுத்து, ஆட்டோ, 'கால் டாக்சி'களில் பயணம் செய்கின்றனர்.
முக்கிய பஸ் நிலையங்கள், ரயில், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்ல, மினி பேருந்து அவசியம். திட்டத்தை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையர் எஸ்.ஜே., சிரு கூறியதாவது:
புதிய மினி பேருந்து வரைவு திட்டம் தொடர்பாக, அனைத்து தரப்பினரின் கருத்து கேட்டு, அரசிடம் அறிக்கை அளித்துள்ளோம். அரசு ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஒப்புதல் கிடைத்தபிறகே, எந்தெந்த வழித்தடம் என்பது இறுதி செய்யப்பட்டு, மினி பேருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தனியார் மினி பஸ்களை
அனுமதித்தால் வழக்கு
சென்னை புறநகரான சோழிங்கநல்லுார், ஆலந்துார், அம்பத்துார், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில், வரும் பிப்ரவரி முதல் தனியார் மினி பேருந்து இயக்கப்பட இருப்பதாக, செய்திகள் வந்துள்ளன. சென்னையில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மினி பேருந்துகளை இயக்க வசதியாக இந்த முயற்சி நடந்து வருகிறது. ஏற்கனவே அரசு போக்குவரத்து கழகம் சார்பில், மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் மினி பேருந்துகளை அனுமதிப்பது, அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையாகிவிடும். சென்னையில் தனியார் பஸ்களை இயக்க உரிமங்கள் வழங்கப்பட்டு இருந்தால், அது சட்ட விரோதம். அதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில வழக்கு தொடருவோம்.
- - - அன்புமணி,
பா.ம.க., தலைவர்.

