ADDED : ஆக 18, 2025 02:48 AM
ரேபிடோ ஓட்டுநர் தற்கொலை
கொரட்டூரில் அக்கா முத்துமாரி என்பவர் வீட்டில் தங்கி, 'ரேபிடோ' பைக் டாக்ஸி ஓட்டி வந்தவர் ராமசாமி, 25. இவர், தொழில் செய்வதற்காக 30,000 ரூபாய் கடன் கேட்டு கிடைக்கவில்லை. விரக்தியில், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, கருணாகரச்சேரி அணுகு சாலையில், 'ஹோண்டா ஷைன்' பைக்கை நிறுத்தி, வேப்பமரத்தில் ராமசாமி துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
குட்கா விற்ற ரவுடிகள் கைது
புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியில், நேற்று முன்தினம் மாலை குட்கா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட, புளி யந்தோப்பு, குருசாமி நகரைச் சேர்ந்த ரவுடியான ரூபன், 36, கே.பி பார்க் பகுதியைச் சேர்ந்த ரவுடி சிலம்பரசன், 21, ஆகியோரை பேசின்பாலம் போலீசார் கைது செய்தனர்.
கடன் தொல்லையால் தற்கொலை
ஆவடி அடுத்த வீராபுரம், திரு.வி.க., நகரைச் சேர்ந்தவர் அஜித்குமார், 30; கார் ஓட்டுநர். இவரது மனைவி நாகலட்சுமி, 28. தம்பதிக்கு ஒரு மகள், பிறந்து சில நாட்களே ஆன மகன் உள்ளார். கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்த அஜித்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓட்டுநருக்கு பிளேடால் வெட்டு
வியாசர்பாடி முதல் தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ், 48; கார் ஓட்டுநர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த கணேசன், 22, என்பவருடன், நேற்று முன்தினம் இரவு மது அருந்தி உள்ளார். போதையில் ஏற்பட்ட தகராறில், கணேசன், தேவராஜின் மார்பு பகுதியில் அறுத்துள்ளார். அங்கிருந்தோர் தேவராஜை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கணேசன் பேசின்பாலம் போலீசில் சரணடைந்தார்.