ADDED : ஆக 23, 2025 12:28 AM
வண்ணாரப்பேட்டை இரும்பு கிடங்கில் தீ
வண்ணாரப்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை, பேரம்பாலு தெருவைச் சேர்ந்த போஸ், 64, அதே பகுதியில் பழைய இரும்பு கிடங்கு வைத்துள்ளார். நேற்று கிடங்கில் இருந்த பொருட்களில் தீ பற்றி, அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது.
தண்டையார்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பேக்கரி ஊழியர்களை
தாக்கிய இருவர் கைது
செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பு அருகில் உள்ள பேக்கரி கடைக்கு, நேற்று முன்தினம் மது போதையில் சென்று தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டனர். அதற்கு பணம் தராததோடு, ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மாமூல் தர மறுத்த ஊழியர்களை தாக்கிவிட்டு தப்பினர். செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த அஜித்குமார், 25, பாபு கான், 28, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.
ஆட்டோ திருடிய
வாலிபர் சிக்கினார்
பாடி புதுநகர்: பாடி புதுநகர், 11வது தெருவைச் சேர்ந்த கணேசன், 52, சவாரி முடித்து, நேற்று முன்தினம் இரவு, வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்தினார். நேற்று காலை அவரது ஆட்டோ மாயமானது. ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரணையில், திருவேற்காடைச் சேர்ந்த மணிகண்டன், 29, என்பவர், ஆட்டோவை திருடிச் சென்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
மது விற்ற பெண்
உட்பட இருவர் கைது
பட்டினப்பாக்கம்: சீனிவாசபுரம் பகுதியில் நேற்று காலை, கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த வளர்மதி, 40, சரவணன், 42, ஆகிய இருவர், சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 43 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.