ADDED : ஆக 25, 2025 05:37 AM

15 கிலோ கஞ்சா பறிமுதல்
பள்ளிக்கரணை: பள்ளிக் கரணை, காமாட்சி மருத்துவமனை அருகே, ஆட்டோவில் வந்த இருவரை, ரோந்து பணியில் இருந்த போலீசார் நேற்று பிடித்தனர். அவர்களது பைகளில் இருந்து 10 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர். கவுரிவாக்கம் பேருந்து நிலையம் அருகே, அண்ணா நகரைச் சேர்ந்த கமலேஷ், 26, என்பவர் 5 கிலோ கஞ்சா வைத்திருந்தார். அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஐ.டி., ஊழியர் கைது
சாஸ்திரி நகர்: பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில், போதைப் பொருள் விற்பனை செய்து வந்த, கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடை சேர்ந்த அருண்பாண்டியன், 35, என்பவரை, சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 10 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பெங்களூரில் இருந்து போதை பொருட்களை சென்னைக்கு கடத்தி விற்றது தெரிய வந்தது.
கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை
பம்மல்: பம்மல், மூங்கில் ஏரி அருகே நேற்று முன்தினம், பம்மல், நக்கீரன் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி கணேஷ், 24, என்பவர், வெட்டி கொலை செய்யப்பட்டார். முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, கணேஷை கொலை செய்தது தெரிய வந்தது. சங்கர் நகர் போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்து விசாரிக்கின்றனர்.