ADDED : அக் 04, 2025 01:54 AM
வழிப்பறியில் ஈடுபட்ட
மூவர் கைது
வில்லிவாக்கம்: செங்குன்றம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜு, 37. இவர், கடந்த 1ம் தேதி மாலை, அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்தச் சென்றார். அப்போது அவரை வழிமறித்த மூவர், நாகராஜுவை தாக்கி, அவரிடமிருந்த 3,000 ரூபாய், மது பாட்டிலை பறித்து தப்பினர்.
புகாரின்படி விசாரித்த வில்லிவாக்கம் போலீசார், வில்லிவாக்கம், ஜெகநாதன் தெருவைச் சேர்ந்த விக்னேஷ், 27, மோசஸ், 27, சிட்கோ நகரைச் சேர்ந்த சதீஷ், 26, ஆகிய மூவரை கைது செய்தனர்.
சட்டவிரோதமாக
மது விற்ற இருவர் கைது
ஓட்டேரி: ஓட்டேரி டோபிகானா குடியிருப்பு பகுதியில், கடந்த 2ம் தேதி போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, அரசு மதுபான வகைகளை சட்ட விரோதமாக கள்ளச்சந்தையில் விற்பது தெரிய வந்தது.
இதையடுத்து, குறிப்பிட்ட பகுதிக்கு சென்ற போலீசார், ஓட்டேரியைச் சேர்ந்த வினோத்ராஜ், 48, மற்றும் சூர்யகுமார், 46, ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 40 குவார்ட்டர் மது பாட்டில்கள், 200 கிராம் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வெளிமாநில மது
விற்றவர் சிக்கினார்
கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை, பிட்டி முனுசாமி தெருவில் உள்ள ஒரு கடையில், வெளிமாநில மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்த, மண்ணடியை சேர்ந்த அலாவுதீன், 43 என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து, 3.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 160 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டில்லியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த விற்றது தெரிய வந்தது.
தொழிலாளியை தாக்கிய
மூவர் கைது
கோயம்பேடு: பெரம்பூர் பேரக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் உஸ்மான், 41; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருந்த இவரை, அடையாளம் தெரியாத மூவர் தாக்கி, இரண்டு மொபைல் போன்களை பறித்து தப்பினர்.
கோயம்பேடு போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட சவுகார்பேட்டையைச் சேர்ந்த தீனா, 27, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், 20, மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
குட்கா விற்றவர் கைது
கடைக்கு 'சீல்'
கிண்டி: ஈக்காட்டுத்தாங்கல், ஜவகர்லால் நேரு சாலையில் உள்ள 'கூல் பார்' கடையில், கிண்டி போலீசார் சோதனை செய்தனர். அதில், அங்கு சட்டவிரோதமாக குட்கா பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடைக்கு 'சீல்' வைத்து, கடை உரிமையாளரான, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார், 30, என்பவரை கைது செய்தனர்.
மூதாட்டியிடம் 3 சவரன்
செயின் பறிப்பு
திருநின்றவூர்: திருநின்றவூர், தேரடி தெருவை சேர்ந்தவர் ஆனந்தம், 80. இவர் நேற்று முன்தினம், தன் வீட்டின் வாசலில் நின்றிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த, 3 சவரன் செயினை பறித்து தப்பினர். திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.