ADDED : அக் 11, 2025 01:30 AM
தேசிய தடகளத்தில்
தமிழக வீரர்கள்
ஒடிஷா மாநில தடகள சங்கம் மற்றும் இந்திய தடகள சங்கம் சார்பில், தேசிய அளவில் '40வது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்' போட்டி, ஒடிஷா, புவனேஸ்வரில் உள்ள கலிங்கா அரங்கில் நேற்று துவங்கி, வரும் 15ம் தேதி வரை நடக்கிறது.
மொத்தமுள்ள 2,000 பேரில் தமிழகம் சார்பில் ஆண்கள் பிரிவில் 77, பெண்கள் பிரிவில் 67 பேர் பங்கேற்றுள்ளனர். கடந்த போட்டியில் தங்கம் வென்ற சுபதர்ஷினி, யுவராஜ், கீர்த்திகா உள்ளிட்ட சென்னையைச் சேர்ந்த 28 வீரர் - வீராங்கனையர், இதில் இடம்பெற்றுள்ளனர். போட்டி 14, 16, 18, 20 வயது பிரிவுகளில் நடக்கிறது.
--
தேசிய யோகா
நவ., 2ல் துவக்கம்
எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் 'ஈசி யோகா ஸ்டுடியோஸ்' இணைந்து, தேசிய யோகா போட்டியை, செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்., வேளாண்மை அறிவியல் கல்லுாரியில் நவ., 2ம் தேதி நடத்துகிறது.
இதில், 7, 9, 11, 13, 15, 21, 30, 40, 50, 60 மற்றும் 60 வயது மேற்பட்டோர் ஆகிய பிரிவுகளில் இப்போட்டி நடத்தப்படுகிறது. தகவலுக்கு 93808 04000 என்ற எண்ணை அழைக்கலாம்.
செங்கை அணி
பேட்மின்டனில்
சாம்பியன்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கான மாநில பால் பேட்மின்டன் போட்டி, திண்டுக்கல் மாவட்டத்தின் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் நடந்தது.
செங்கல்பட்டு அணி, நாக் - அவுட் மற்றும் லீக் சுற்றுகளில் ஒரு போட்டியில்கூட தோற்காததால் அதிக புள்ளிகள் பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அடுத்ததாக சென்னை அணி இரண்டு வெற்றி, ஒரு தோல்வி என வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது.