ADDED : அக் 16, 2025 12:54 AM

அராபத் ஏரியை
பாதுகாக்க போராட்டம்
ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சி.டி.எச்., சாலையை ஒட்டி நீர்வளத்துறைக்கு சொந்தமான அராபத் ஏரியைச் சுற்றி, மணிகண்டபுரம், சரவணா நகர் மற்றும் ஸ்ரீனிவாசா நகர் பகுதிகளில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரியில் கலக்கிறது.
இந்நிலையில், புழல் ஏரி, அராபத் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், திருமுல்லைவாயில், சி.டி.எச்., சாலையில் நேற்று, போராட்டம் நடந்தது.
அராபத் ஏரியை உடனடியாக துார்வாரி, கரைகளை பலப்படுத்தி, மழைநீரை தேக்கும் வகையில் மதகு அமைக்க வேண்டும் என, கோஷங்களை எழுப்பினர்.
தீக்காய சிகிச்சைக்கு
சிறப்பு வார்டு தயார்
கீழ்ப்பாக்கம்: தீபாவளி பண்டிகையையொட்டி, தீக்காய சிகிச்சைக்கு 40 படுக்கைகள் உடைய இரு சிறப்பு வார்டுகள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகள், தீபாவளி வரை 24 மணி நேரமும் செயல்படும் என, மருத்துவமனை முதல்வர் கவிதா தெரிவித்துள்ளார்.
வணிக வளாகத்தில்
கடைகள் ஒதுக்கீடு
அடையாறு: அடையாறு, இந்திரா நகரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில், 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. வளாகத்தின் ஒரு பகுதியை, உணவு வளாகமாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதில் இருந்த ஒன்பது கடைகளில் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, அருகில் உள்ள வணிக வளாகத்தில், காலியாக உள்ள கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் அடையாறு மண்டலம், மடுவாங்கரையில் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் உணவு கூடம் அமைக்க, 15 லட்சம் ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது.
வி.சி., தலைவரை
கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஆலந்துார்: சென்னை உயர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் ராஜிவ்காந்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, வி.சி., தலைவர் திருமாவளவனை கண்டித்தும், தாக்கிய கட்சி தொண்டர்களை கைது செய்யக் கோரியும் ஆலந்துார் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.