ADDED : நவ 21, 2025 05:39 AM

ரவுடிகள் இருவர் கைது
புளியந்தோப்பு: புளியந்தோப்பு காந்தி நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு ரவுடியான, அதே பகுதியைச் சேர்ந்த 'பாம்பு' நாராயணன், 24, என்ற ரவுடியை, பேசின் பாலம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதே போல், புளியந்தோப்பு வ.உ.சி., நகர் பகுதியைச் சேர்ந்த 'பல்லு' மணிகண்டன், 23, என்ற ரவுடியும், வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார். அவரையும், பிடிவாரன்ட் மூலம் புளியந்தோப்பு போலீசார், நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
18 மாடுகள் பிடிப்பு
ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை, மாநகராட்சி அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு பிடித்தனர். மொத்தம் 18 மாடுகளை பிடித்த அதிகாரிகள், கோ சாலை எனும் மாடுகளை பராமரிக்கும் இடத்தில் அடைத்தனர்.
ஆவடியில் இதுவரை 174 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் 4.08 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
8 கிலோ கஞ்சா பறிமுதல்
அண்ணா நகர்: பெரம்பூர் ரயில் நிலையம் அருகில், ஜமாலியா பேருந்து நிறுத்தத்தில், அண்ணா நகர் மதுவிலக்கு போலீசார், நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி பெரிய பார்சலுடன் வந்த மூவரை மடக்கி சோதித்ததில், மூவரிடமும் கிலோ கணக்கில் கஞ்சா இருப்பது தெரிந்தது.
விசாரணையில், ராமநாதபுரத்தை சேர்ந்த இம்ரான்கான், 31, கார்த்தியராஜ், 25, பூப்பாண்டி, 38, என்பது தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மொத்தம் 8.750 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
உதவி
செயற்பொறியாளர்
பணியிட மாற்றம்
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, ஐந்தாவது மண்டலத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் குமார்.
இவரை, மாங்காடு நகராட்சி உதவி செயற்பொறியாளராக பணியிட மாற்றம் செய்து, நகராட்சி நிர்வாக இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், குன்றத்துார் நகராட்சியையும் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

