/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாதாரண மழைக்கே குளமாக மாறும் அவலம்... 65 இடங்கள்! கனமழையை எதிர்கொள்வதில் தொடரும் சவால்
/
சாதாரண மழைக்கே குளமாக மாறும் அவலம்... 65 இடங்கள்! கனமழையை எதிர்கொள்வதில் தொடரும் சவால்
சாதாரண மழைக்கே குளமாக மாறும் அவலம்... 65 இடங்கள்! கனமழையை எதிர்கொள்வதில் தொடரும் சவால்
சாதாரண மழைக்கே குளமாக மாறும் அவலம்... 65 இடங்கள்! கனமழையை எதிர்கொள்வதில் தொடரும் சவால்
ADDED : நவ 05, 2024 12:15 AM

சென்னை மாநகராட்சி பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழைக்கு, 65 இடங்களில் வெள்ள நீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டு வருவது அடையாளம் காணப்பட்டுள்ளது. கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டும், பழைய நிலை தொடர்வதால், அடுத்து வரும் புயல் மழை நாட்களை எப்படி எதிர்கொள்வது என, குடியிருப்புவாசிகள் கவலை அடைந்துள்ளனர்.
'தென்மேற்கு வங்க கடலில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், வரும் 7ம் தேதி முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்; இது, புயல் சின்னமாக மாறலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நாட்களில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த கனமழை பெய்யக்கூடும் எனவும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மாநகராட்சி பகுதிகளில், மழை பாதிப்பு தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
குறிப்பாக, கடந்த மாதம் அக்டோபரில் பெய்த கனமழையால், சென்னை மாநகராட்சி பகுதிகளில், 543 இடங்களில் மழைநீர் தேக்கம் காணப்பட்டது. மேலும், 77 மரங்கள் சாய்ந்தன.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் முதல் கனமழைக்கே, இவ்வளவு இடங்களில் மழைநீர் தேங்கியது குறித்து, மண்டல வாரியாக ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், சாலையில் வீசப்பட்ட பிளாஸ்டிக் போன்ற குப்பையால், பெரும்பாலான இடங்களில் மழைநீர் கால்வாய் அடைப்பு மற்றும் இணைப்பு இல்லாதது முக்கிய காரணமாக கண்டறியப்பட்டது.
மேலும், மோட்டார்கள் அமைக்கப்பட்ட பகுதிகளிலும், மழைநீர் வடிய நீண்ட நேரம் ஆனதும் தெரிய வந்தது. இதில், 65 இடங்களில் ஓரிரு நாட்கள் வரை, மழைநீர் தொடர்ந்து தேங்கியுள்ளதும் தெரியவந்தது.
சமீப நாட்களாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையாலும், பல பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்குவது, குடியிருப்புவாசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
பல கோடி ரூபாய் செலவு செய்தும், சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகிறது.
இந்நிலையில், வரும் கனமழைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், புளியந்தோப்பு, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட 65 இடங்களில் அதிகளவில் மழை வெள்ளம் தேங்கி, கடும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
இந்தாண்டு செப்டம்பர் முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், சில பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
அக்டோபரில் பெய்த மழையால், 543 இடங்களில் மழைநீர் தேங்கியது கண்டறியப்பட்டது. கடந்த காலங்களில் மழைநீர் தேங்காத, 30க்கும் மேற்பட்ட பகுதிகளிலும், கடந்த மாதத்தில் மழைநீர் தேங்கியது தெரியவந்தது.
அதுகுறித்து, மண்டல வாரியாக ஆராயப்பட்டது. மழைநீர் தேங்கி நிற்பதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டன.
குறிப்பாக, மழை பெய்யும்போது, நிலங்கள் நீரை உறிஞ்சும். ஏற்கனவே நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததால், அக்., மாத மழைக்கு நீர் தேக்கமடைந்துள்ளது.
மேலும், மழைக்காலத்தில் சாலையோரங்கள், நீர்நிலையோரங்களில் வீசப்பட்ட, 'பிளாஸ்டிக்' போன்ற குப்பையால் அடைப்பு ஏற்பட்டது. அத்துடன், 30க்கும் மேற்பட்ட இடங்களில், மழைநீர் வடிகால் இணைப்பு இல்லை. இவையெல்லாம் ஆராயப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.
அதேநேரம், 65 இடங்கள், நீண்ட நாட்களுக்கு மழைநீர் தேங்கக்கூடிய இடங்களாக உள்ளன. அப்பகுதிகளில், கடந்த மழைக்கு தலா இரண்டு மோட்டார்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அங்கு, நான்கு அல்லது அதற்கு மேல் தேவைக்கு ஏற்ப மோட்டார்கள் அதிகரிக்கப்படும். மேலும், போதிய அளவில் படகுகள், பேரிடர் மீட்பு குழுக்கள், அப்பகுதியில் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கடந்த மழையில் கற்ற பாடங்கள் அடிப்படையில், வரும் மழை மற்றும் புயலை எதிர்கொள்ள தயராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -