/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி... என்கவுன்டர்! போலீசுடன் நடந்த சண்டையில் சுட்டுக்கொலை
/
வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி... என்கவுன்டர்! போலீசுடன் நடந்த சண்டையில் சுட்டுக்கொலை
வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி... என்கவுன்டர்! போலீசுடன் நடந்த சண்டையில் சுட்டுக்கொலை
வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி... என்கவுன்டர்! போலீசுடன் நடந்த சண்டையில் சுட்டுக்கொலை
ADDED : செப் 19, 2024 12:14 AM

சென்னை: போலீசாருடன் நேற்று அதிகாலை நடந்த சண்டையில், வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக்கொல்லப்பட்டார். காரில் துரத்திச் சென்ற போது, கள்ளத்துப்பாக்கியால் காக்காதோப்பு பாலாஜி சுட்டதால், தற்காப்பு நடவடிக்கையாக சுட்டதில் அவர் குண்டு பாய்ந்து இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சென்னை பாரிமுனை, பந்தர்நாயக்கன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் காக்கா தோப்பு பாலாஜி, 44; கொடூர குற்றங்களை செய்யும், 'ஏ பிளஸ்' பிரிவு ரவுடியாக அடையாளப்படுத்தப்பட்டவர். இவர் மீது, ஆறு கொலைகள், 17 கொலை முயற்சி என, 59 வழக்குகள் உள்ளன.
இவரை, வியாசர்பாடி அருகே நேற்று அதிகாலை, கொடுங்கையூர் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.
ரவுடி பாலாஜி என்கவுன்டர் செய்யப்பட்டது குறித்து, சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் பிரவேஷ்குமார் கூறியதாவது:
சென்னை எம்.கே.பி., நகர் காவல் நிலைய எல்லையில், முல்லை நகர் சிக்னல் பாலம் அருகே, எஸ்.ஐ., நாதமுனி, காவலர் சுகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 4:32 மணிக்கு, அவ்வழியே புதுச்சேரி பதிவு எண்ணுடன் வந்த சாம்பல் கலர் காரை நிறுத்தினர்.
ஓட்டுனர் இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்த, ஓட்டேரியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரை கீழே இறங்கச் செய்து, அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில், 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
ஓட்டுனர் சீட்டில் இருந்த காக்கா தோப்பு பாலாஜி, காரை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பினார்.
இதுகுறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்.ஐ., நாதமுனி தகவல்தெரிவித்தார். 'வாக்கி டாக்கி' வாயிலாக சென்னை முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
இந்த தகவல், எம்.கே.பி., நகர் பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு தெரியவந்தது. அவர், சம்பந்தப்பட்ட கார் முல்லை நகரில் இருந்து வியாசர்பாடியை நோக்கிச் செல்வதை அறிந்து, காரில் பாலாஜியை பின் தொடர்ந்தார். இவருக்கு பின்னால், மற்றொரு வாகனத்தில் எஸ்.ஐ., மற்றும் காவலர் சென்றனர்.
ரவுடி பாலாஜியின் கார், காலை 4:50 மணிக்கு வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே, கைவிடப்பட்ட பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு வளாகத்தின் முட்டு சந்தில் சிக்கிக்கொண்டது.
வேறு வழியின்றி காரில் இருந்து இறங்கிய பாலாஜி, கை துப்பாக்கியால் இன்ஸ்பெக்டரின் வாகனத்தை நோக்கி திடீரென சுட்டார். அந்த குண்டு, இன்ஸ்பெக்டர் காரின் முன் பக்க கண்ணாடியை துளைத்து வெளியேறியது.
அவரை எச்சரித்தவாறு, காரில் இருந்து இன்ஸ்பெக்டர் இறங்க முயன்றார். பாலாஜி மற்றொரு முறை சுட்டதில், காரின் இடது பக்க கதவில் துளையிட்டது.
இதனால், தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள இன்ஸ்பெக்டர் சரவணன், அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
குண்டு, அந்த நபரின் இடது பக்க மார்பு பகுதியில் பாய்ந்தது. குண்டடிபட்டு பாலாஜி சரிந்து விழுந்தார். அதற்குள், சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.ஐ., மற்றும் காவலர்பரிசோதனை செய்தபோது, பாலாஜிக்கு மூச்சு இருந்துள்ளது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டரின் காரில் பாலாஜியை ஏற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், வரும் வழியிலேயே பாலாஜி உயிரிழந்தது தெரிந்தது.
பாலாஜியின் உடல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
என்கவுன்டர் குறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலாஜியிடம் இருந்து கார், வீச்சரிவாள், நாட்டு துப்பாக்கி, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு இணை கமிஷனர் பிரவேஷ்குமார் கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்பவர், கடந்த ஜூலை 14ம் தேதி என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, தற்போது மேலும் ஒரு ரவுடி கொல்லப்பட்டுள்ளார்.