/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணிபர்ஸை திருட முயன்ற வடமாநில பெண்கள் கைது
/
மணிபர்ஸை திருட முயன்ற வடமாநில பெண்கள் கைது
ADDED : ஆக 02, 2025 12:14 AM

மாம்பலம்,தி.நகரில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, இரும்பு கடைக்காரரிடம் கைவரிசை காட்ட முயன்ற வடமாநில பெண்களை, மாம்பலம் போலீசார் கைது செய்தனர்.
சைதாப்பேட்டை, அப்பாவு நகரைச் சேர்ந்தவர் சரவணன், 48; இரும்பு கடைக்காரர். இவர், நேற்று முன்தினம், தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடையில் பொருட்களை வாங்கி, கையில் பையுடன் சாலையில் நடந்து சென்றார்.
ஆடி மாதம் என்பதால், தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்குவதற்கு ஏராளமானோர் வருவதால், தி.நகரில் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பெண் ஒருவர், சரவணனின் மணிபர்ஸை திருட முயன்றார். சுதாரித்த அவர் சத்தம் போடவே, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் பிரதீப் உட்பட பலர், அப்பெண்ணை பிடித்தனர். அதேபோல் கூட்டத்தில் கைவரிசை காட்ட முயன்ற மேலும் மூன்று பெண்களையும் மடக்கி பிடித்தனர்.
மாம்பலம் போலீசார் விசாரணையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சோனம், 36, நேகா, 35, சாவித்திரி பாய், 36, மோகினிபாய், 45 ஆகிய இவர்கள், கூட்ட நெரிசலை பயன்படுத்தி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
இதேபோல் பல மாநிலங்களில் கைவரிசை காட்டியதும் தெரிந்தது. சோனம் மீது, பல்வேறு இடங்களில் எட்டு வழக்குகள் உள்ளன. இதையடுத்து, நான்கு பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.