/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூக்கு கண்ணாடி பிரேம் சேதம் நிறுவனம் இழப்பீடு தர உத்தரவு
/
மூக்கு கண்ணாடி பிரேம் சேதம் நிறுவனம் இழப்பீடு தர உத்தரவு
மூக்கு கண்ணாடி பிரேம் சேதம் நிறுவனம் இழப்பீடு தர உத்தரவு
மூக்கு கண்ணாடி பிரேம் சேதம் நிறுவனம் இழப்பீடு தர உத்தரவு
ADDED : நவ 05, 2024 12:27 AM
சென்னை,
சர்வீசுக்கு வழங்கிய மூக்கு கண்ணாடி பிரேமை சேதப்படுத்திய, 'ஸ்பெக்ஸ் மேக்கர்' நிறுவனம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு, 15,000 ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த அருணாசலம் என்பவர் தாக்கல் செய்த மனு:
எனக்குள்ள துார பார்வை குறைபாடுக்கு, மூக்கு கண்ணாடி அணிந்து வருகிறேன். 'பிரீமியம்' பிராண்ட் கண்ணாடி 'பிரேம்' வாங்க திட்டமிட்டு, லாரன்ஸ் அண்ட் மாயோவிடம் இருந்து, 'லிண்ட்பெர்க்' என்ற மாடல் கண்ணாடி பிரேம் வாங்கி, பயன்படுத்தி வந்தேன்.
பின், கண்ணாடியை மாற்ற எண்ணி, ஆழ்வார்பேட்டையில் உள்ள, ஸ்பெக்ஸ் மேக்கர் என்ற நிறுவன மையத்தில், 2023 மார்ச் 21ல் வழங்கினேன்.
சில நாட்கள் கழித்து, கண்ணாடி பிரேம் முழுமையாக சேதமடைந்துள்ளதால், 4,000 ரூபாய் செலுத்தி, புதிய பிரேமை தேர்வு செய்ய அறிவுறுத்தினர்.
சேதம் குறித்து கேட்டபோது, உரிய விளக்கம் அளிக்கவில்லை. சேதம் அடைந்த கண்ணாடி பிரேம் மதிப்பு, 50,000 ரூபாய். ஆனால், பிரேம் சேதத்துக்கு நிறுவனம் பொறுப்பேற்காது என, மரியாதை குறைவாக முறையில் பதிலளித்தனர். சேதத்துக்கு அவர்களே பொறுப்பு.
இருப்பினும், வேறு வழியின்றி, 4,000 ரூபாய் செலுத்தி புதிய பிரேம் வாங்கினேன். சேதத்தால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, ஒரு லட்சம் ரூபாயும், பிரேம் தொகை 52,000 ரூபாய், சேவை குறைபாடுக்கு, 50,000 ரூபாய், புதிதாக வாங்கிய பிரேமுக்காக, 4,600 ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பி.ஜிஜா, உறுப்பினர்கள் டி.ஆர்.சிவக்குமார், எஸ்.நந்தகோபாலன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
புகார்தாரர், தன் பொருளை பழுது நீக்கத்துக்கு வழங்கியதை, நிறுவன பிரதிநிதிகள் அலட்சியமாக கையாண்டது சேவை குறைபாடாகும்.
எனவே, ஸ்பெக்ஸ் மேக்கர் நிறுவனம், புதிய பிரேம் வாங்க செலுத்திய, 4,600 ரூபாய்; சேவை குறைபாடுக்கு, 10,000 ரூபாய்; வழக்கு செலவுக்கு, 5,000 ரூபாயை, புகார்தாரருக்கு செலுத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.