/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதுச்சேரி வாகன பதிவு உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்'
/
புதுச்சேரி வாகன பதிவு உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்'
புதுச்சேரி வாகன பதிவு உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்'
புதுச்சேரி வாகன பதிவு உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்'
ADDED : டிச 08, 2024 12:20 AM
சென்னை, சென்னையில் நாளுக்கு நாள் வாகன எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் முக்கிய வருவாயாக, வாகன பதிவு வரி உள்ளது. அதேபோல், 'ஆம்னி' பேருந்து உள்ளிட்ட பயணியர் போக்குவரத்திற்கு, இருக்கைக்கு ஏற்ப வரி விதிக்கப்படுகிறது.
அதேநேரம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் வரி குறைவு என்பதால், சொகுசு கார் உள்ளிட்ட வாகனங்களை, அங்கு பதிவு செய்து தமிழகத்தில் பயன்படுத்துகின்றனர்.
இதற்கு, புதுச்சேரியில் தற்காலிக முகவரி சான்று தயார் செய்து பதிவு செய்கின்றனர். இதனால், தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க, புதுச்சேரியில் பதிவு செய்து தமிழகத்தில் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருந்து 'நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது.
இது குறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:
புதிய வாகனங்கள் பதிவு செய்ய, தமிழகத்தில் 20 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. புதுச்சேரியில் 15 சதவீதம் விதிப்பதால், தற்காலிக முகவரி சான்று வைத்து, பலர் அங்கு வாகனங்களை பதிவு செய்கின்றனர். அதேபோல், ஆம்னி பேருந்துகளுக்கு இருக்கையை கணக்கிட்டு வரி விதிக்கப்படும். வெளி மாநிலங்களில் வரி குறைவு என்பதால், அங்கு பதிவு செய்து தமிழகத்தில் இயக்குகின்றனர்.
இதனால் ஏற்படும் வருவாய் இழைப்பை சரிசெய்ய, வரி குறைவான புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்து, தமிழகத்தில் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்புகிறோம்.
இந்த நோட்டீஸ், மோட்டார் வாகன சட்டம் 1974 பிரிவு 4/2 மற்றும் 1988 பிரிவு 40ன் கீழ் அனுப்பப்படுகிறது. புதுச்சேரியை ஒட்டி உள்ள மாவட்டங்களில், அதிகமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு அலுவலகத்தில் இருந்தும், முதற்கட்டமாக, 80 முதல் 150 உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளோம்.
வாகனம் பயன்படுத்திய ஆண்டை கணக்கிட்டு, வரி செலுத்த வேண்டும். தமிழகத்தில் வரி செலுத்தியபின், உரிய ஆவணங்களை வைத்து, புதுச்சேரியில் செலுத்திய வரியை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். புதுச்சேரியில் நிரந்தர முகவரி சான்று வைத்துள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.