/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரிப்பன் மாளிகையில் குவிந்த 500 போலீசார் மனு கொடுக்க வந்ததோ 2 பேர் தான்!
/
ரிப்பன் மாளிகையில் குவிந்த 500 போலீசார் மனு கொடுக்க வந்ததோ 2 பேர் தான்!
ரிப்பன் மாளிகையில் குவிந்த 500 போலீசார் மனு கொடுக்க வந்ததோ 2 பேர் தான்!
ரிப்பன் மாளிகையில் குவிந்த 500 போலீசார் மனு கொடுக்க வந்ததோ 2 பேர் தான்!
ADDED : ஆக 29, 2025 10:33 PM

சென்னை, துாய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கிடைத்த தகவலால், ரிப்பன் மாளிகையை சுற்றி, 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கோரிக்கை மனு கொடுக்க நிர்வாகிகள் இருவர் மட்டுமே வந்ததால், போலீசார் நிம்மதி அடைந்தனர்.
சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.,நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்த மண்டலங்களில், ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த துாய்மை பணியாளர்கள், சம்பளம் குறையும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
துாய்மை பணியை தனியாரிடம் தர எதிர்ப்பு தெரிவித்து, ஆக., 1 முதல் 13ம் தேதி வரை தொடர்ச்சியாக ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த போராட்டம் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, நள்ளிரவில் வலுக்கட்டயமாக அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ரிப்பன் மாளிகை முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட உழைப்போர் உரிமை இயக்கத்தினர், ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டல அலுவலகங்களில் நேற்று முன்தினம், நுாற்றுக்கணக்கில் குவிந்தனர். குப்பை அகற்றும் பணியை தனியார் மயமாக்கக்கூடாது எனக்கோரி, மண்டல அலுவலர்களிடம் மனு அளித்தனர்.
நேற்று, ரிப்பன் மாளிகையை முற்றுகையிட போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட ஐந்து துணை கமிஷனர்கள் தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று ரிப்பன் மாளிகையை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள், 'சிசிடிவி' கண்காணிப்பு வாகனங்களுடன், கைது செய்து அழைத்து செல்ல வசதியாக, 20 மாநகர பேருந்துகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
ஆனால், துாய்மை பணியாளர் போராட்டத்தின் உழைப்போர் உரிமை இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் பாரதி உள்ளிட்ட இருவர் மட்டுமே, மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு சென்றார்.
மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனரிடம் மனு கொடுக்க அனுமதி கேட்டார். அனுமதி மறுக்கப்பட்டது. போலீசார் அவரை வெளியேறும்படி அறிவுறுத்தியதை தொடர்ந்து, ரிப்பன் மாளிகையை விட்டு வெளியேறினார். ஆனால், துாய்மை பணியாளர்கள் குவிவர் என்ற பீதியில் இருந்த மாநகராட்சி அதிகாரிகளும், போலீசார், யாரும் வராததால் நிம்மதியடைந்தனர்.