/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ.சி.ஆரில் திட்டமிடாத வடிகால்வாய் பணி குடிநீர், மின்சாரம் துண்டிப்பால் மக்கள் அவதி ஒப்பந்த நிறுவனங்கள் மீது அதிகாரிகள் குற்றச்சாட்டு
/
இ.சி.ஆரில் திட்டமிடாத வடிகால்வாய் பணி குடிநீர், மின்சாரம் துண்டிப்பால் மக்கள் அவதி ஒப்பந்த நிறுவனங்கள் மீது அதிகாரிகள் குற்றச்சாட்டு
இ.சி.ஆரில் திட்டமிடாத வடிகால்வாய் பணி குடிநீர், மின்சாரம் துண்டிப்பால் மக்கள் அவதி ஒப்பந்த நிறுவனங்கள் மீது அதிகாரிகள் குற்றச்சாட்டு
இ.சி.ஆரில் திட்டமிடாத வடிகால்வாய் பணி குடிநீர், மின்சாரம் துண்டிப்பால் மக்கள் அவதி ஒப்பந்த நிறுவனங்கள் மீது அதிகாரிகள் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 08, 2025 12:19 AM

சென்னை,இ.சி.ஆரில், நீலாங்கரை, கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதியில், 418 கோடி ரூபாயில், பாதாள சாக்கடை திட்டப்பணி நடக்கிறது. இதற்காக, 17 கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைத்து, 139 கி.மீ., துாரத்தில் பிரதான குழாயும், 24 கி.மீ., துாரத்தில் உந்து குழாயும் அமைக்கப்படுகிறது.
இந்த பணி, 2023 நவ., மாதம் துவங்கியது. கே.எம்.இன்பா புராஜக்ட் என்ற நிறுவனம், இப்பணியை செய்கிறது. அதேபோல், 53 கோடி ரூபாயில், 14 கி.மீ., துாரத்தில் மழைநீர் வடிகால் கட்டும் பணியை, குமார் பில்டர்ஸ் மற்றும் கே.சி.பி., ஆகிய நிறுவனங்கள் செய்கின்றன.
இந்த திட்டத்திற்கு, சாலை துண்டிப்பு முக்கிய பணியாக உள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் திட்ட பணிகளை செய்ய வேண்டும் என, மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆனால், மின் வாரியம், தொலைத் தொடர்பு துறைகளில், எந்த தகவலும் தெரிவிக்காமல் சாலையை துண்டித்து பணி செய்கின்றனர். முறையான பயிற்சி பெறாத ஜே.சி.பி., ஓட்டுநர்களால், மின்சார கேபிள், குடிநீர் குழாய் துண்டிக்கப்படுகிறது.
ஒரு தெருவில், வடிகால்வாய் அல்லது பாதாள சாக்கடை, இதில் ஏதாவது ஒரு பணி முடிந்த பின், அடுத்த பணி துவங்க வேண்டும் என, உயர் அதிகாரிகள் கூறினர்.
ஆனால், ஒப்பந்த நிறுவனங்களின் அலட்சியம், அதிகாரிகள் மேற்பார்வை இல்லாமை போன்ற காரணங்களால், ஒரே நேரத்தில் இரு திட்டங்களும் துவங்கப்பட்டு, சாலை முழுதையும் துண்டிக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக, கொட்டிவாக்கம், வைதேகி சாலை, ஏ.ஜி.எஸ்., காலனி, நட்கோ காலனி உள்ளிட்ட பகுதிகளில், குழாய் அடைப்பால் குடிநீர் வீணடிப்பு, மின்சாரம் துண்டிப்பு போன்றவை தொடர் நிகழ்வாக உள்ளன.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
பணிகளை ஒருங்கிணைந்து செய்வோம் என, உயர் அதிகாரிகள் நடத்தும் கூட்டத்தில் சம்மதிக்கும் திட்ட மேற்பார்வை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள், களத்தில் அப்படி நடந்து கொள்வதில்லை.
கேட்டால், அலட்சியமாக பதில் கூறுகின்றனர். மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்வதில்லை. குழாய்களை உடைத்ததால், ஒரு மாதமாக முறையாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.
தினமும் மின்தடை ஏற்படுகிறது. கோடையில் மின்சாரம், குடிநீர் இல்லாமல் மிகவும் பரிதவிக்கிறோம். உயர் அதிகாரிகளுக்கு ஆன்லைன் புகார் அளித்தால், அதை கீழ் அதிகாரிகள் முறையாக விசாரிப்பதில்லை. இந்நிலை தொடர்ந்தால், சாலை மறியல் செய்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் அளிக்கும் ஆலோசனைகளின் அடிப்படையில் தான் பணிபுரிகிறோம். ஒரு தெருவில் பணியை முழுமையாக முடித்துவிட்டு, அடுத்த தெருவுக்கு செல்ல திட்டமிடுகிறோம். கட்டுமான பொருட்கள் வருவதில் தாமதம், சரியான ஊழியர்கள் கிடைக்காமை போன்ற காரணங்களால், சில தெருக்களில் பிரச்னை ஏற்படுகிறது. அதை சரி செய்ய முயற்சிக்கிறோம்.
- ஒப்பந்த நிறுவன ஊழியர்கள்
பாதாள சாக்கடை, வடிகால்வாய் திட்டத்திற்கான ஒப்பந்த நிறுவன அலுவலர்கள், ஊழியர்கள், எங்கள் உத்தரவை மதிப்பதில்லை. பகுதிவாசிகள் உணர்வுக்கு மதிப்பளித்து செயல்படுங்கள் என, பலமுறை கூறி விட்டோம். ஆனால், அவர்கள் ஆளுங்கட்சியினரை சொல்லி எங்களை மிரட்டுகின்றனர். துறை அமைச்சர், நேரடியாக துவங்கிய திட்டம். அவர் வந்து ஆய்வு செய்தால் தான், மக்களுக்கு விடிவு கிடைக்கும்.
- குடிநீர் வாரியம், மாநகராட்சி அதிகாரிகள்