/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குட்டை ஆக்கிரமிப்பை அகற்றுவதில் கோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்
/
குட்டை ஆக்கிரமிப்பை அகற்றுவதில் கோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்
குட்டை ஆக்கிரமிப்பை அகற்றுவதில் கோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்
குட்டை ஆக்கிரமிப்பை அகற்றுவதில் கோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்
ADDED : ஜூலை 07, 2025 04:38 AM

ஒட்டியம்பாக்கம்:ஒட்டியம்பாக்கத்தில் அமைந்துள்ள வெட்டியான் குட்டையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட குடிசைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அவற்றை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
பரங்கிமலை ஒன்றியம், ஒட்டியம்பாக்கத்தில் பழைய புல எண்: 73/1, புதிய புல எண்: 313/3ல், 1.2 ஏக்கர் பரப்பளவில், வெட்டியான் குட்டை அமைந்துள்ளது.
இது, பொது மக்களின் பயன்பாட்டிலும், கால்நடைகள் நீர் அருந்தவும் பயனுள்ளதாக இருந்து வந்த நிலையில், தற்போது சிலர் இதை ஆக்கிரமித்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசி வீரபாபு என்பவர் கூறியதாவது:
குறிப்பிட்ட குளத்தின் 5 சென்ட் பரப்பு கரையை, கடந்த இருபது ஆண்டுகளாக சிலர் ஆக்கிரமித்திருந்தனர். இரு ஆண்டுகளுக்கு முன், ஒட்டுமொத்த குட்டையையும் மண்ணை கொட்டி மூடி சமன்படுத்தி, சுற்றிலும் வேலி அமைத்து, ஓலை குடிசை அமைத்துள்ளனர்.
இதன் தற்போதையை சந்தை மதிப்பு 10 கோடி ரூபாய்.
குட்டை ஆக்கரமிப்பை அகற்ற, நான் தொடுத்த வழக்கு எண்: 15464/2025 தீர்ப்பில், தமிழக நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905ன் படி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, தாம்பரம் வட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக, வட்டாட்சியருக்கு நேரடியாகவும், ஜமாபந்தியிலும் மனு கொடுத்தும், தீர்ப்பு வந்து இரு மாதங்களாகியும், ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, வரும் பருவமழை காலத்திற்குள் ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீர் சேகரமாகும் வகையில், குட்டையை துார்வாரி பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிடில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

