/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆம்னி பஸ்கள் கோயம்பேடில் இருந்தே இயங்கும்!
/
ஆம்னி பஸ்கள் கோயம்பேடில் இருந்தே இயங்கும்!
ADDED : டிச 09, 2024 03:15 AM
சென்னை:'வழக்கம்போல் கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடி பகுதிகளில் இருந்தே ஆம்னி பஸ்கள் இயக்கப்படும்' என, தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை, கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகில் உள்ள முடிச்சூரில், 42.70 கோடி கோடி ரூபாயில், ஆம்னி பஸ்கள் நிறுத்துமிடத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்றுமுன்தினம் திறந்து வைத்தார். இதையடுத்து, அங்கிருந்துதான், ஆம்னி பஸ்கள் புறப்படும் என்ற தகவல் பரவி வருகிறது.
இதை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மறுத்துள்ளனர். அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:
கோயம்பேடில் இருந்து பஸ் நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டபோது, அங்கு ஆம்னி பஸ்கள் நிறுத்த இடம் இல்லாமல் இருந்தது. இதனால், ஆம்னி பஸ்களின் இயக்கத்தில் தடை ஏற்பட்டது.
இதையடுத்து, 150 ஆம்னி பஸ்கள் வரை நிறுத்தும் வசதியுடன், முடிச்சூரில் ஆம்னி பஸ் நிறுத்தத்தை அரசு அமைத்துள்ளது. இதனால், அங்கிருந்துதான் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என்ற தகவல் பரவி வருகிறது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களின் பணிமனைகளில் இருந்தும், போரூர் டோல்கேட் அருகில் இருந்தும், வழக்கம் போல ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உயர்நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை இந்த நிலை தொடரும்; வேறு எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.