/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார் மோதி ஒருவர் பலி போதை டிரைவர் கைது
/
கார் மோதி ஒருவர் பலி போதை டிரைவர் கைது
ADDED : ஜன 25, 2025 12:39 AM
ஆவடி, அம்பத்துார், ஒரகடத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 51. இவர், பணி நிமித்தமாக, ஆவடி -- செங்குன்றம் பிரதான சாலை, கொள்ளுமேடு வழியாக 'ஹோண்டா ஷைன்' பைக்கில், நேற்று காலை 9:30 மணியளவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிர் திசையில் வேகமாக வந்த, 'மாருதி டூர்' கார், சக்திவேல் ஓட்டி சென்ற பைக் மீதும், அவருக்கு பின்னால் 'பஜாஜ் சிடி 100' பைக்கில் வந்த, திருமுல்லைவாயிலைச் சேர்ந்த லோகநாதன், 65, என்பவர் மீதும் மோதியது.
இதில் துாக்கி வீசப்பட்ட சக்திவேலுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது; லோகநாதனுக்கு வலது கால், இடது கையில் காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, சக்திவேலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். லோகநாதனை மேல்சிகிச்சைக்காக, போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்தனர்.
இதில், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகாவைச் சேர்ந்த ரவி, 39, என்பதும், அதீத மதுபோதையில் காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதும் தெரியவந்தது. ரவியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

