/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுத்திகரிப்பு நிலையங்களில் 'ஆன்லைன்' கண்காணிப்பு
/
சுத்திகரிப்பு நிலையங்களில் 'ஆன்லைன்' கண்காணிப்பு
ADDED : அக் 12, 2024 12:34 AM
சென்னை,
'தமிழகத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சரிவர செயல்படவில்லை; கழிவுநீரை சுத்திகரிக்கும் திறன் கண்காணிக்கப்படுவதில்லை. எனவே, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுமையாக செயல்படுவதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும்' என, வெற்றிச்செல்வன் என்பவர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த தீர்ப்பாயம் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட்டது. அதன்படி, சென்னை குடிநீர் வாரிய கண்காணிப்பு பொறியாளர் தாக்கல் செய்த அறிக்கை:
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்களின்படி, கழிவுநீர் சுத்திகரிப்பில், கழிவுநீரில் தேங்கியுள்ள திடப்பொருட்கள் ஆய்வு; கரிம பொருட்களை உடைக்க தேவையான ஆக்சிஜன் அளவு; கரிம சேர்மங்களை ஆக்சிஜனேற்றம் செய்வதற்கான ஆக்சிஜன் தேவை ஆகிய மூன்று பரிசோதனைகள் முக்கியம்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில், இந்த பரிசோதனை நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க, ஆன்லைன் தொடர் கழிவுநீர் கண்காணிப்பு அமைப்பு, சென்னை குடிநீர் வாரியத்தின்கீழ் செயல்படும் அனைத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.
இவை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் உருவாகும் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட பிறகே வெளியேற்றப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, டிச., 20ல், தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நடக்கவுள்ளது.