/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆலந்துாரில் கலை கல்லுாரி திறப்பு 20 ஆண்டு கால கோரிக்கைக்கு தீர்வு
/
ஆலந்துாரில் கலை கல்லுாரி திறப்பு 20 ஆண்டு கால கோரிக்கைக்கு தீர்வு
ஆலந்துாரில் கலை கல்லுாரி திறப்பு 20 ஆண்டு கால கோரிக்கைக்கு தீர்வு
ஆலந்துாரில் கலை கல்லுாரி திறப்பு 20 ஆண்டு கால கோரிக்கைக்கு தீர்வு
ADDED : மே 27, 2025 01:01 AM

நங்கநல்லுார், ஆலந்துார் மண்டலத்தில், சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ளது. தென்சென்னை இணை கமிஷனர் அலுவலகம், மெட்ரோ, மின்சார ரயில் நிலையம், ராணுவ பயிற்சி மையம், தனியார் கல்லுாரிகள் அமைந்துள்ளன.
ஆனால், ஆலந்துார் தாலுகாவில் அரசு கல்லுாரி இல்லை. அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவியர், பிளஸ் 2 முடித்து வெளியேறுகின்றனர். அவர்கள் உயர்கல்விக்காக தனியார் கல்லுாரிகளையே நாட வேண்டியுள்ளது.
பெண்கள் கல்லுாரியில் சேர, பல கி.மீ., துாரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதனால், ஆலந்துார் தாலுகாவில் அரசு கல்லுாரி அமைக்க வேண்டும் என, பல ஆண்டு காலமாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆலந்துாரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 1.88 ஏக்கர் அரசு இடம் கல்லுாரிக்காக ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில், விரைவில் திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டு, கல்லுாரி வளாகம் கட்டப்பட உள்ளது.
இருப்பினும், வரும் கல்வியாண்டே கல்லுாரி துவக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான மாணவ - மாணவியர் சேர்க்கை நடத்தப்பட்டு, தற்காலிகமாக ஆலந்துார், நேரு பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடத்தில் கல்லுாரி செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆலந்துார் உள்ளிட்ட தமிழகம் முழுதும், 11 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளை, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக, நேற்று திறந்து வைத்தார்.
இதற்கான விழா, நங்கநல்லுார் நேரு பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், அமைச்சர் அன்பரசன், எம்.பி., பாலு, ஆலந்துார் மண்டல குழு தலைவர் சந்திரன், புதிய கல்லுாரி முதல்வர் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கல்லுாரி வகுப்பறைகளை திறந்து வைத்த அமைச்சர் அன்பரசன் கூறியதாவது:
புதிதாக துவக்கப்பட்ட இருபாலர் கல்லுாரி, வரும் கல்வியாண்டு முதல் நங்கநல்லுார் நேரு பள்ளி வளாகத்தில் இயங்கும்.
இதில், பி.ஏ., அரசியல் அறிவியல் பிரிவில் 60 பேர், பி.பி.ஏ., 60 பேர், பி.காம்., - பொது -60 பேர், பி.எஸ்.சி., கணினி அறிவியல் -50 பேர், பி.எஸ்.சி., உளவியல் -50 பேர் என, 280 மாணவ - மாணவியர் சேர்க்கப்படுகின்றனர்.
இதுவரை, இந்த பிரிவுகளுக்கு, 20,802 மாணவ - மாணவியர், 'ஆன்-லைன்' வாயிலாக விண்ணப்பித்துள்ளனர். வரும் 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.
இக்கல்லுாரிக்காக, முதல்வர், நுாலகர், உடற்பயிற்சி ஆசிரியர், துறை பேராசிரியர்கள் என, 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 16ம் தேதி வகுப்புகள் துவக்கப்படும். நாள் ஒன்றுக்கு ஐந்து மணிநேரம் வகுப்புகள் நடத்தப்படும்.
விரைவில், கல்லுாரிக்கான இடத்தில், அனைத்து வசதிகளுடன் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அங்கு மாணவர்கள் மாற்றப்படுவர். எதிர்காலத்தில், 3,000 மாணவர்கள் படிக்கும் அளவிற்கு துறைகள், தரம் உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலந்துார் மண்டலத்தில் அரசு கல்லுாரி இல்லாதது, பெரும் குறையாகவே இருந்தது. இப்பகுதிவாசிகளின் பல ஆண்டு கோரிக்கை, தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐந்து துறைகளுடன் துவக்கப்பட்ட இக்கல்லுாரியில், மேலும் பல துறைகளை கொண்டு, ஆலந்துார் சுற்று வட்டார மாணவ - மாணவியரின் எதிர்கால கல்விக்கு உறுதுணையாக விளங்க வேண்டும்.
- எஸ்.வெங்கட்ரமணி, 72, நங்கநல்லுார்.