/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேம்படுத்தப்பட்ட மெரினா கடற்கரை திறப்பு
/
மேம்படுத்தப்பட்ட மெரினா கடற்கரை திறப்பு
ADDED : ஆக 04, 2025 04:15 AM

சென்னை:நீலக்கொடி சான்று பெறுவதற்காக, சென்னை மெரினா கடற்கரையில், 7.31 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட பணிகளை, துணை முதல்வர் உதயநிதி நேற்று, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
மெரினாவில், அண்ணா நீச்சல் குளம் அருகே உள்ள, 20 ஏக்கர் பகுதி, நீலக் கொடி மண்டலங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளது.
நீலக்கொடி சான்று என்பது, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, துாய்மையான கடற்கரைகளுக்கு வழங்கப்படும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.
சுற்றுச்சூழல் தரம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட, 33 தகுதிகளின் அடிப்படையில், இந்த சான்று கடற்கரைக்கு வழங்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரைக்கு, இந்த சான்று வழங்கப்பட்டுள்ள நிலையில், நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் மற்ற கடற்கரைகளுக்கும், நீலக்கொடி சான்று பெறுவதற்கான முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, சென்னை, கடலுார், ராமநாதபுரம் மற்றும் துாத்துக்குடியில் உள்ள கடற்கரை பகுதிகள், இத்திட்டத்தின் கீழ் தேர்வுச் செய்யப்பட்டு, நீலக்கொடி சான்று பெறப்பட உள்ளன.
முதற்கட்டமாக, சென்னை மெரினா கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம், மூங்கில் குடைகள், சாய்வு நாற்காலிகள் உள்ளிட்ட, 16 பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடற்கரை மேம்படுத்தப்பட்டு உள்ளது.
கடற்கரை மேம்பாட்டு பணிகளை, துணை முதல்வர் உதயநிதி நேற்று திறந்து வைத்து, பார்வையிட்டார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மெரினாவில் நடந்த பணிகள்
மூங்கில் நிழற்குடைகள் - 40, சாய்வு நாற்காலிகள் - 40, அமரும் நாற்காலிகள் - 12, கண்காணிப்பு கோபுரங்கள் - 4, குப்பைத் தொட்டிகள் - 25, மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு செல்லும் சக்கர நாற்காலிகள் - 12, சிறுவர் விளையாட்டு உபகரணம் - 4, தென்னை மரங்கள் - 10, துாய்மை இயந்திரம் - 9, முகப்பு வளைவு, தியான மையம், வாசிக்கும் அறை, பாலுாட்டும் அறை உள்ளிட்ட பணிகள், 7.31 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டு உள்ளன.