/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பட்டினப்பாக்கம் கடற்கரையில் கட்டட கழிவுகளை அகற்ற உத்தரவு
/
பட்டினப்பாக்கம் கடற்கரையில் கட்டட கழிவுகளை அகற்ற உத்தரவு
பட்டினப்பாக்கம் கடற்கரையில் கட்டட கழிவுகளை அகற்ற உத்தரவு
பட்டினப்பாக்கம் கடற்கரையில் கட்டட கழிவுகளை அகற்ற உத்தரவு
ADDED : ஆக 29, 2025 10:26 PM
சென்னை 'பட்டினப்பாக்கம் கடற்கரையில் சட்ட விரோதமாக கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை உடனே அகற்ற வேண்டும்' என, சென்னை மாநகராட்சிக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய மீனவ நலச்சங்கத் தலைவர் பாரதி, பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், 'ஆமைகள் முட்டையிடும் பகுதி என, சி.ஆர்.இசட்., எனும் கடற்கரை ஒழுங்முறை மண்டல விதிகளில், சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த கடற்கரையில் சட்ட விரோதமாக கட்டட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இவை கடலுக்குள் அடித்துச் செல்லப்படுவதால் கடல் அரிப்பு ஏற்படுகிறது. எனவே, கட்டட கழிவுகளை அகற்ற உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு பிரசாந்த் கர்கவா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
'சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் - 1986 பிரிவு 5ன் கீழ், பட்டினப்பாக்கம் கடற்கரையில் கழிவுகளை கொட்டுவது தடை செய்யப்பட்டது. எனவே, அங்கு கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை அகற்ற வேண்டும்' என, சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு, தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கட்டட கழிவுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது என, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி கமிஷனர், தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் செப்., 2ல் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.