/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரு மாதங்களில் உரிந்த 'பெயின்ட்' ரூ.58,000 இழப்பீடு வழங்க உத்தரவு
/
இரு மாதங்களில் உரிந்த 'பெயின்ட்' ரூ.58,000 இழப்பீடு வழங்க உத்தரவு
இரு மாதங்களில் உரிந்த 'பெயின்ட்' ரூ.58,000 இழப்பீடு வழங்க உத்தரவு
இரு மாதங்களில் உரிந்த 'பெயின்ட்' ரூ.58,000 இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : செப் 30, 2024 12:37 AM
சென்னை, செப். 30-
வீட்டில் அடித்த 'பெயின்ட்' இரண்டு மாதங்களிலேயே உரிந்ததால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 58,994 ரூபாய் செலுத்த, 'அர்பன்' கம்பெனிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை, அயனாவரம் பகுதியைச் சேர்ந்த தேவன் பாரத் தோஷி என்பவர் தாக்கல் செய்த மனு:
அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு, 2022 ஏப்., 29ம் தேதி வண்ணம் பூச திட்டமிட்டேன். கிண்டியில் உள்ள 'அர்பன் கம்பெனி' என்ற நிறுவனம், 43,994 ரூபாய் கட்டணத்தில் பெயின்டிங் பணியை செய்தது. மூன்று ஆண்டுகள் உத்தரவாதமும் அளித்தது.
ஆனால், இரு மாதங்களுக்குள், சுவரில் பூசிய வண்ணப்பூச்சு உரிந்து வந்தது. சுவரில் நிறமாற்றமும் ஏற்பட்டது.
இப்பிரச்னை குறித்து புகார் அளித்ததும், ஜூலை 4ம் தேதி அந்நிறுவன பிரதிநிதிகள் வந்து ஆய்வு செய்து, பிரச்னையை சரி செய்வதாக உறுதியளித்தனர். பின் கண்டுகொள்ளவில்லை.
பின், தேசிய அளவிலான வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்தும், உரிய பதில் இல்லை.
எனவே, பெயின்டிங் கட்டணம் 43,994 ரூபாய், மன உளைச்சல், வழக்கு மற்றும் குறைகளை நிவர்த்தி செய்யாததற்கு என, உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, கடலுார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மூன்றாம் நபரால் வழங்கப்பட்ட சேவையால் ஏற்பட்ட குறைபாடு, தவறுகளுக்கு, இடைத்தரகரான 'அர்பன் கம்பெனி' பொறுப்பாகாது என்ற வாதம் ஏற்புடையதல்ல.
இவ்வழக்கை பொறுத்தமட்டில் நுகர்வோர், சேவை வழங்குனர் உறவு உள்ளது. 'இ- காமர்ஸ்' சந்தையில், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு- - 79 விதிகளின் கீழ், 'இடைத்தரகர்' பொறுப்பாவார். அதிலிருந்து விலக முடியாது.
இடைத்தரகர் என்றாலும், அவரின்கீழ் பணிபுரியும் நபர்களின் பணி, அவர்கள் பயன்படுத்தும் பொருட்களின் தரம் உள்ளிட்டவற்றை கண்காணிக்க வேண்டும். அதை செய்ய தவறிவிட்டது.
எனவே, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் வண்ணம் பூச செலுத்திய கட்டணம் 43,994 ரூபாயை, 9 சதவீத வட்டியுடன், அர்பன் கம்பெனி நிறுவனம் திருப்பி வழங்க வேண்டும்.
சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு 10,000 ரூபாயும், வழக்கு செலவுக்கு 5,000 ரூபாயையும், இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அமர்வு உத்தரவிட்டது.