/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுற்றுலா அழைத்து செல்லாமல் ஏமாற்றிய நிறுவனம் ரூ.1.56 லட்சம் வழங்க உத்தரவு
/
சுற்றுலா அழைத்து செல்லாமல் ஏமாற்றிய நிறுவனம் ரூ.1.56 லட்சம் வழங்க உத்தரவு
சுற்றுலா அழைத்து செல்லாமல் ஏமாற்றிய நிறுவனம் ரூ.1.56 லட்சம் வழங்க உத்தரவு
சுற்றுலா அழைத்து செல்லாமல் ஏமாற்றிய நிறுவனம் ரூ.1.56 லட்சம் வழங்க உத்தரவு
ADDED : நவ 24, 2024 08:47 PM
சென்னை:'கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகும், சுற்றுலா அழைத்து செல்லாமல் அலைக்கழித்த தனியார் நிறுவனம், வாடிக்கையாளர் செலுத்திய, 1.51 லட்சம் ரூபாயுடன், வழக்கு செலவாக 5,000 ரூபாய் சேர்த்து வழங்க வேண்டும்' என, மாவட்ட தெற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை முகப்பேரை சேர்ந்த நீதாமேனன் தாக்கல் செய்த மனு:
கோடம்பாக்கத்தில், 'லா அலெக்ரியா இன்டர்நேஷனல் டூர்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற சுற்றுலா நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம், 2019ல் சர்வதேச சுற்றுலா திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டு, மூன்று பேருக்கு உணவு மற்றும் தங்குமிடத்துடன் கூடிய சுற்றுலா திட்டம் குறித்து விபரம் கேட்டேன். கட்டணமாக, ஒரு லட்சத்து, 51,200 ரூபாய் நிர்ணயம் செய்தனர். அந்த தொகையை, நிறுவன வங்கி கணக்கில் செலுத்தினேன்.
கடந்த 2020 மே மாதம் சுற்றுலா செல்ல திட்டமிடப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளால் பயணம் தள்ளி வைக்கப்பட்டது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகும், சுற்றுலா அழைத்து செல்லாமல் அலைக்கழித்தனர். கடந்த 2022 ஜூனில் பணத்தை திருப்பி தருவதாக உறுதி அளித்தனர். அதன்படி பணத்தை திருப்பித்தரவில்லை.
பலமுறை தொடர்பு கொண்டபோதும், உரிய பதில் அளிக்கவில்லை. பணத்தை திருப்பி தராமல், நம்பிக்கை மோசடி, சேவை குறைபாடு செய்த நிறுவனம், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடாக தருவதோடு, நான் செலுத்திய கட்டணத்தையும் திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த ஆணைய தலைவர் பி.ஜிஜா, உறுப்பினர்கள் டி.ஆர்.சிவக்குமார், எஸ்.நந்தகோபாலன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
நோட்டீஸ் அனுப்பியும், தனியார் சுற்றுலா நிறுவனம் தரப்பில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை. நியாயமற்ற வணிக நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, சேவை குறைபாடுடன் நடந்த நிறுவனம், பாதிக்கப்பட்ட மனுதாரர் செலுத்திய கட்டணத்தை, எட்டு வாரங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
வழக்கு செலவாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில், 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.