/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓ.எஸ்.ஆர்., நிலங்களை மீட்க தாசில்தார் நியமனம்
/
ஓ.எஸ்.ஆர்., நிலங்களை மீட்க தாசில்தார் நியமனம்
ADDED : பிப் 10, 2025 03:57 AM
சென்னை:அடையாறு மண்டலம், 175, 176, 177, 178 ஆகிய வார்டுகள், வேளச்சேரி பகுதியைச் உள்ளடக்கியவை. இங்கு, 1970ம் ஆண்டுக்கு முன்பிருந்தே, வீட்டுமனை உருவாக்கப்பட்டு வருகிறது.
இங்கு, டான்சிநகர், அன்னை இந்திராநகர், வி.ஜி.பி., செல்வா நகர், புவனேஸ்வரிநகர், தண்டீஸ்வரம் நகர் உட்பட ஏராளமான நகர்கள் உள்ளன.
இப்பகுதிகளில் வீட்டுமனை உருவாக்கும்போது, 10 சதவீத நிலம், ஓ.எஸ்.ஆர்., என்ற பொது பயன்பாட்டுக்கான திறந்தவெளி இடமாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதில், பல இடங்களில் பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளன. சில இடங்களில் நுாலகம், ரேஷன் கடை உள்ளன.
ஆனால், ஓ.எஸ்.ஆர்., இடங்களை ஒதுக்கி, அதை முறையாக உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்காத மற்றும் ஒப்படைத்தும் கட்டமைப்பு அமைக்காத இடங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன.
மாநகராட்சிக்கு தெரியும்போது, ஆக்கிரமிப்பாளர்கள் வழக்கு போடுகின்றனர். இதுபோன்ற வழக்கை, அதிகாரிகள் முறையாக எதிர்கொள்ளாததால், ஒரு தலைபட்ச உத்தரவு பெற்று, இடத்தை கைவசம் வைத்திருக்கின்றனர்.
இதுபோன்று, 175, 176வது வார்டுகளில், 50 சென்ட்; 177, 178வது வார்டுகளில், எட்டு இடங்களில் ஒதுக்கிய, 1.55 ஏக்கர் ஓ.எஸ்.ஆர்., இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதன் மதிப்பு 75 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.
இந்த இடங்கள், நீதிமன்றத்தில் முறையாக வழக்கு நடத்தாமல், மாநகராட்சியால் கோட்டை விடப்பட்டவை. இதுகுறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, 'எக்ஸ் பார்ட்டி' எனும் ஒருதலைபட்சமான உத்தரவு பெற்று, உரிய சட்ட வழிமுறையை பின்பற்றாமல் பூங்காவை சேதப்படுத்தி, அங்கிருந்த 15 மரங்களை வெட்டியவர்கள் மீது, மாநகராட்சி அதிகாரிகள், வேளச்சேரி போலீசில் புகார் அளித்தனர்.
மேலும், வேளச்சேரியில் ஆக்கிரமிப்பில் உள்ள ஓ.எஸ்.ஆர்., இடங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க, கணேசன் என்ற தாசில்தாரை மாநகராட்சி நியமித்து உள்ளது. தாசில்தாரின் குழுவினர், ஆவணங்கள் அடிப்படையில், ஓ.எஸ்.ஆர்., இடங்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.