/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நம்ம ஊரு சாம்பியன்:நாட்டின் முதல் 'வீல் சேர் ரேஸர்' கலைச்செல்வி
/
நம்ம ஊரு சாம்பியன்:நாட்டின் முதல் 'வீல் சேர் ரேஸர்' கலைச்செல்வி
நம்ம ஊரு சாம்பியன்:நாட்டின் முதல் 'வீல் சேர் ரேஸர்' கலைச்செல்வி
நம்ம ஊரு சாம்பியன்:நாட்டின் முதல் 'வீல் சேர் ரேஸர்' கலைச்செல்வி
ADDED : நவ 16, 2025 02:24 AM

சென்னை: இன்று 'நம்ம ஊரு சாம்பியன்' பக்கத்தில், 'சர்வதேச வீல்சேர் ரேஸர்' தரவரிசையில் 10வது இடத்திலும், இந்தியா அளவில் முதல் இடத்திலும் ஜொலிக்கும் தமிழக வீரமங்கை கலைச்செல்வி.
'பாராலிம்பிக்ஸ்' போன்ற சர்வதேச விளையாட்டுகளில் பிரதான விளையாட்டாக 'வீல் சேர் ரேஸ்' உள்ளது. தடகள வகை சார்ந்த இந்த பந்தயத்தில், சக்கர நாற்காலியை பயன்படுத்தி வேகமாக முன்னேறி இலக்கை அடைய வேண்டும்.
இப்போட்டியில் தமிழகத்தின் அடையாளமாக மாறியுள்ளார், கடலுார் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த 31 வயதான கலைச்செல்வி.
நாட்டின் முதல் பெண் பாரா வீல்சேர் ரேஸர் என்ற அந்தஸ்தை பெற்ற கலைச்செல்வி. இந்திய அளவில் முதல் இடத்தையும், சர்வதேச தரவரிசையில் 10வது இடத்தையும் தக்க வைத்து அசத்தி வருகிறார்.
தனது 22வது வயதில் பயிற்சியை துவங்கிய இவர், 'கேலோ இந்தியா' பாரா போட்டியில் முதல் பதக்கத்தைப் பெற்றார்.
கடந்த மூன்றாண்டுகளில் சர்வதேச போட்டிகளில், ஐந்து தங்கம் உட்பட பல்வேறு பதக்கங்கள், தேசிய போட்டிகளில் 10க்கும் மேற்பட்ட பதக்கங்கள் என மொத்தம் 20க்கும் மேற்பட்ட பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
வாழ்க்கையின் திருப்பம் இது குறித்து கலைச்செல்வி கூறியதாவது:
குழந்தைப் பருவத்தில் போலியோ பாதிப்பால் இரு கால்களும் செயலிழந்தது. அதிக வளர்ச்சி அடையாத கிராமப்புறத்தில் வளர்ந்தவள் நான்; பி.ஏ., தமிழ் படித்து குடும்ப சூழ்நிலைக்காக, வேலை தேடி சென்னை நோக்கி வந்தேன். எல்லாரும் என்னுடைய குறையை காரணம் காட்டி, வேலை தராமல் ஒதுக்கிவிடுவர். இதனால், வேலை தேடி சென்னை முழுதும் சுற்றி வந்தேன்.
நான் விடுதியில் தங்கியிருந்த நேரம், நண்பர் களுடன் பாரா கூடைப்பந்து விளையாடுவது வழக்கம். விளையாட்டில் ஆர்வமில்லாத எனக்கு, வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது அங்கிருந்து தான்.
அப்போது, பாரா தடகள பயிற்சியாளர் விஜய் சாரதியின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலமாக, வீல்சேர் ரேஸிங் போட்டிக்குள் வந்தேன்.
அப்போது, 'நாட்டின் முதல் பெண் வீல்சேர் ரேஸர்' என்ற பெருமையை அடைவேன் என எதிர்பார்க்கவில்லை. என் விருப்பம், 'நாட்டிற்காக கலைச்செல்வி பல சாதனைகள் படைத்தாள்' என, மக்கள் சொல்ல வேண்டும்; அதுவே எனக்கு போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசின் உதவி தேவை
நாட்டின் முதல் வீல்சேர் ரேஸர் என்ற அந்தஸ்தை கலைச்செல்வி பெற்றிருந்தாலும், நிதி தொடர்பான சுமைகள் அதிகமாக அவரை வாட்டி வதைக்கிறது.
முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் தான் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளது. மாற்றுத்திறன் என்ற தடைக்கல்லை உடைத்தெறிந்து நாட்டிற்காக சாதிக்கும் கலைச்செல்விக்கு, அரசு வேலை கிடைக்க முதல்வர் உதவ வேண்டும்.

