/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கைமாறியது வெளிவட்ட சாலை திட்டம்: நிலத்திற்கு பணம் கேட்கும் சி.எம்.டி.ஏ.,
/
கைமாறியது வெளிவட்ட சாலை திட்டம்: நிலத்திற்கு பணம் கேட்கும் சி.எம்.டி.ஏ.,
கைமாறியது வெளிவட்ட சாலை திட்டம்: நிலத்திற்கு பணம் கேட்கும் சி.எம்.டி.ஏ.,
கைமாறியது வெளிவட்ட சாலை திட்டம்: நிலத்திற்கு பணம் கேட்கும் சி.எம்.டி.ஏ.,
ADDED : டிச 16, 2025 04:59 AM
சென்னை: வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை திட்டம், மாநில நெடுஞ்சாலை ஆணையத்துக்கு மாற்றப்பட்டதால், அதற்காக நிலம் கையகப்படுத்தி கொடுத்த சி.எம்.டி.ஏ., நிர்வாகம், அந்த செலவு தொகை, 926.69 கோடி ரூபாயை கேட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வண்டலுார் - மீஞ்சூர் இடையே வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை, 62 கி.மீ., தொலைவுக்கு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தில் சாலை அமைக்கும் பணிகளை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டது. நிலம் கையகப்படுத்தி கொடுக்கும் பொறுப்பை, சி.எம்.டி.ஏ., ஏற்று செயல்படுத்தியது.
இதற்காக, சி.எம்.டி.ஏ.,வில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இந்த பிரிவு வாயிலாகவே நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், சமீபத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் புதிதாக துவங்கப்பட்டது.
இதையடுத்து, வெளிவட்ட சாலை சொத்துகள் அனைத்தும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், வெளிவட்ட சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்ட வகையில், சி.எம்.டி.ஏ.,வுக்கு தற்போது வரை, 929.69 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. இத்தொகையை தருமாறு, மாநில நெடுஞ்சாலை ஆணையத்துக்கு, சி.எம்.டி.ஏ., கடிதம் எழுதியது.
ஆனால், இந்த தொகையை வழங்க, நெடுஞ்சாலை ஆணையம் முன்வரவில்லை. எனவே, நிலம் கையகப்படுத்தும் செலவை வசூலித்து கொடுக்குமாறு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையை அணுக, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.

