/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதாள சாக்கடை திட்டம் இழுபறி பள்ளிக்கரணைவாசிகள் அதிருப்தி
/
பாதாள சாக்கடை திட்டம் இழுபறி பள்ளிக்கரணைவாசிகள் அதிருப்தி
பாதாள சாக்கடை திட்டம் இழுபறி பள்ளிக்கரணைவாசிகள் அதிருப்தி
பாதாள சாக்கடை திட்டம் இழுபறி பள்ளிக்கரணைவாசிகள் அதிருப்தி
ADDED : மார் 05, 2024 12:50 AM
பள்ளிக்கரணை, பெருங்குடி மண்டலம், பள்ளிக்கரணையில் வார்டு 189, 190ல் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, கடந்த 2011ல், 52.53 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் துவக்கப்பட்டன.
முதற்கட்டமாக 14,600 வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு வழங்க திட்டம் வகுக்கப்பட்டு, அனைத்து பணிகளும், 2013 மார்ச் மாதம் முடிவுக்கு வரும் எனக் கூறினர்.
பல்வேறு காரணங்களால் இழுத்தடிப்பு செய்யப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள், 2019ல் முடிவுக்கு வந்ததாக, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இன்றுவரை வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:
கடந்த 2019ல் பணிகள் முடிந்துவிட்டன எனக் கூறிய அதிகாரிகள், தற்போது வரை வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க மறுப்பது ஏன்? உண்மையில் பணிகள் முடிந்துவிட்டதா அல்லது முடிக்கப்பட்டது என பொய் கூறுகின்றனரா என தெரியவில்லை.
பாதாள சாக்கடை திட்டம் துவக்கப்பட்டதில் இருந்து, ஆண்டுதோறும் சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், வீடுதோறும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 15 ஆண்டுகளாக கட்டணம் வசூலித்தும், தற்போது வரை வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படவில்லை.
இதனால், தனியார் லாரிகள் வாயிலாக வீடுகளில் தேங்கியுள்ள கழிவுநீர் அகற்றப்பட்டு வருகிறது. இதற்கு கட்டணமாக தனியார் லாரிகள், ஒரு வீட்டிற்கு 1,500 ரூபாயை வசூலிக்கின்றன.
இந்நிலையில், இத்திட்டத்திற்காக 12 ஆண்டுகளுக்கு முன், நிலத்தில் புதைக்கப்பட்ட குழாய்கள், செயல் திறனை இழந்து, வெடிப்பு ஏற்பட்டும், சிதிலமடைந்தும் உள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிக்கரணை பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது என, அதிகாரிகள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

