/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் நடப்போரை முட்டும் மாடுகளால் தாம்பரத்தில் பீதி
/
சாலையில் நடப்போரை முட்டும் மாடுகளால் தாம்பரத்தில் பீதி
சாலையில் நடப்போரை முட்டும் மாடுகளால் தாம்பரத்தில் பீதி
சாலையில் நடப்போரை முட்டும் மாடுகளால் தாம்பரத்தில் பீதி
ADDED : ஜன 03, 2025 12:26 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி, 47வது வார்டு, கிழக்கு தாம்பரம், மதுரகவி தெருவை சேர்ந்தவர் ஜானகி, 60.
அதே பகுதியில் உள்ள வீடுகளில், வீட்டு வேலைகள் செய்து வருகிறார். வீட்டு வேலைக்கு செல்லும் முன், அருகில் உள்ள கோவிலை சுத்தப்படுத்திவிட்டு செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் அதிகாலை, வழக்கம் போல் கோவிலை சுத்தம் செய்ய சென்ற போது, சாலையில் நின்றிருந்த மாடு ஒன்று, திடீரென வேகமாக மோதி கீழே தள்ளியது.
ஜானகி கீழே விழுந்து கூச்சலிட்டதும், அங்கு வந்த சோமுவீரப்பன், 70, என்ற முதியவர், குச்சியால் மாட்டை துரத்த முயன்றார்.
அப்போது, அவரையும் மாடு முட்டியது. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, மாட்டை துரத்தினர். மாடு முட்டியதில், ஜானகிக்கு கையில் எலும்பு முறிவும், சோமுவீரப்பனுக்கு தலையில் காயமும் ஏற்பட்டது.
இரண்டு நாட்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி, 60, என்ற மூதாட்டியையும், மாடு முட்டி தள்ளியதில், அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த மூன்று நாட்களில், 15க்கும் மேற்பட்டோரை மாடு முட்டியதாக, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர், அப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என, வலியுறுத்திஉள்ளனர்.

