/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பராமரிப்பு இல்லாத ரயில் நிலையங்களில் பயணியர் தவிப்பு; மலிவு விலை குடிநீர் திட்டம் முடக்கத்தால் அதிர்ச்சி
/
பராமரிப்பு இல்லாத ரயில் நிலையங்களில் பயணியர் தவிப்பு; மலிவு விலை குடிநீர் திட்டம் முடக்கத்தால் அதிர்ச்சி
பராமரிப்பு இல்லாத ரயில் நிலையங்களில் பயணியர் தவிப்பு; மலிவு விலை குடிநீர் திட்டம் முடக்கத்தால் அதிர்ச்சி
பராமரிப்பு இல்லாத ரயில் நிலையங்களில் பயணியர் தவிப்பு; மலிவு விலை குடிநீர் திட்டம் முடக்கத்தால் அதிர்ச்சி
UPDATED : மே 08, 2025 07:14 AM
ADDED : மே 07, 2025 11:47 PM

சென்னை :கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில், மலிவு விலை குடிநீர் திட்டம் முடங்கியுள்ளதால், பயணியர் குடிநீருக்காக தவித்து வருகின்றனர். தவிர, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததாலும், ரயில் நிலைய வளாகத்தின் மோசமான பராமரிப்பாலும், அவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சென்னையில் கடற்கரை - செங்கல்பட்டு, வேளச்சேரி - கடற்கரை, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட மின்சார ரயில் இயக்கப்படும் வழித்தடங்களில், தினமும் லட்சக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர்.
தவிர, வெளியூர்களுக்கும் எழும்பூர், தாம்பரம், சென்ட்ரல், மேற்கு மாம்பலம், செங்கல்பட்டு மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் இருந்து விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையின் பல ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. பெரும்பாலான நேரத்தில் நகரும்படிகள் பழுதடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக, கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாததால், அவை பூட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணியர், இயற்கை உபாதை கழிக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர்.
ரயில் பயணியர் கூறியதாவது:
சென்னை கடற்கரை - வேளச்சேரி; கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் புறநகர் மின்சார வழித்தடங்களில், ரயில் நிலையங்கள் பராமரிப்பு படுமோசமாக இருக்கிறது.
சில ரயில் நிலையங்களில், இரவு நேரத்தில் மின்விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்துாக்கி, நகரும்படிகள் பழுதடைந்து காணப்படுகின்றன.
எந்த நிலையங்களிலும் கழிப்பறை வசதி போதிய அளவில் இல்லை. வேளச்சேரி, சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், இந்திராநகர் உள்ளிட்ட பல ரயில் நிலையங்களின் கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாமல், உரிய பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. அவசரத்துக்கு கூட, பயணியர் செல்ல முடியாமல் பயணியர் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். நடைமேடைகள் துாய்மையின்றி குப்பை குவித்து, துர்நாற்றம் வீசுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, பயணியரின் வசதிக்காக, முக்கிய ரயில் நிலையங்களில் 2015ல் கொண்டு வரப்பட்ட மலிவு விலை குடிநீர் திட்டம் முடக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களில், 300 மி.லி., - அரை லிட்டர், 1 லிட்டர், 2 லிட்டர், 5 லிட்டர் அளவுகளில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது.
பாட்டில் இல்லாமல், 300 மி.லி., குடிநீர் ஒரு ரூபாய்; அரை லிட்டர் மூன்று ரூபாய்; 1 லிட்டர் ஐந்து ரூபாய்; 2 லிட்டர் எட்டு ரூபாய்; 5 லிட்டர் குடிநீர் 20 ரூபாய்க்கு வழங்கப்பட்டது.
பாட்டிலுடன் பெற முறையே, இரண்டு, ஐந்து, எட்டு, 12, 25 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டது. ரயில்வேயின் இந்த திட்டம், பயணியரிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த திட்டம் முன்னறிவிப்பின்றி முடங்கியுள்ளது. இதனால், ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில் அதிக விலை கொடுத்து குடிநீர் பாட்டில் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பயணியரின் நலன் கருதி, மலிவு விலை குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளூர் ரயில் பயணியர் சங்க செயலர் பாஸ்கர் கூறியதாவது:
சென்னை, புறநகரின் பெரும்பாலான ரயில் நிலையங்களில் குழாய்கள் அமைக்கப்பட்டும், போதிய அளவில் குடிநீர் வசதி இல்லை.
இதனால் பயணியர், கடைகளில் பணம் கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
விரைவு ரயில்களில் விற்கப்படும் 1 லிட்டர் 'ரயில் நீர்' பாட்டீலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை 15 ரூபாய் தான். ஆனால், ஐந்து ரூபாய் உயர்த்தி விற்பனை செய்கின்றனர்.
இதேபோல், மற்ற நொறுக்கு தீனிகள், குளிர்பானங்களின் விலையும் அதிகபட்ச சில்லரை விலையைவிட, உயர்த்தி விற்கின்றனர். சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது, ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'மலிவு விலையில் குடிநீர் வழங்கும் திட்டம் நிறுத்தப்படவில்லை. சில இடங்களில் ரயில் நிலையங்களின் மேம்பாட்டு பணிகள் நடப்பதால், தற்காலிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
வாக்குவாதம்
சென்னையின் பல ரயில் நிலையங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் ஒப்பந்தாரர்களின் ஒப்பந்தம், ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேம்பால ரயில் நிலையங்களில் போதிய வசதிகள் இல்லை எனக்கூறி, பயணியர் எங்களிடம் தினமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ரயில்வே அலுவலர்கள்
நடவடிக்கை தேவை
சென்னையில் நுங்கம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, திருநின்றவூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பல முக்கிய ரயில் நிலையங்களில், மலிவு விலையில் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பயணியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த இந்த திட்டம், தற்போது முடங்கியுள்ளது. இதனால், வெயில் காலத்தில் பயணியர் அவதிப்படுகின்றனர். மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகையன்,
திருநின்றவூர் ரயில் பயணியர் பொதுநலச் சங்க தலைவர்