UPDATED : ஆக 15, 2026 10:07 PM
ADDED : ஆக 15, 2026 09:32 PM

சென்னை: மாநகர பேருந்துகளுக்கான மாதாந்திர பயண அட்டைகளை கவுன்டர்களில் வழங்க மறுத்து, 'சென்னை ஒன்' செயலியில் பெறுமாறு ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதால், பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை உள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் பயணிக்க 320 - 2,000 ரூபாய் வரை மாதாந்திர பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன.
இவை, ஒவ்வொரு மாதமும் 7 முதல் 22ம் தேதி வரை, பிராட்வே, தி.நகர், அடையாறு, தாம்பரம், ஆவடி, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 29 மையங்களில் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், பெரும்பாலான மையங்களில் பயண அட்டைகளை கவுன்டரில் வழங்க மறுத்து, 'சென்னை ஒன்' செயலியில் பெறுமாறு ஊழியர்கள் கூறுவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
சாதாரண மொபைல்போன் வைத்திருப்போர் மற்றும் செயலியை கையாளத் தெரியாத முதியோர், காகித வடிவிலான பயண அட்டை வழங்கக் கோரி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழல் நிலவுகிறது. செயலி மூலம் பாஸ் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அதை கட்டாயமாக்கக் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், 'செயலி பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கவுன்டர்களில் பயண அட்டை வழங்கும் வசதி தற்போது வரை நிறுத்தப்படவில்லை' என்றனர்.
