/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாட்டன் குளம் பூங்கா பணி அரைகுறை ரூ.1.67 கோடி மக்கள் வரிப்பணம் 'ஸ்வாகா'
/
பாட்டன் குளம் பூங்கா பணி அரைகுறை ரூ.1.67 கோடி மக்கள் வரிப்பணம் 'ஸ்வாகா'
பாட்டன் குளம் பூங்கா பணி அரைகுறை ரூ.1.67 கோடி மக்கள் வரிப்பணம் 'ஸ்வாகா'
பாட்டன் குளம் பூங்கா பணி அரைகுறை ரூ.1.67 கோடி மக்கள் வரிப்பணம் 'ஸ்வாகா'
ADDED : அக் 07, 2025 12:52 AM

திருவேற்காடு, அயனம்பாக்கம், பாட்டன் குளத்தை சீரமைத்து பூங்கா அமைக்கும் பணிகள் அரைகுறையாக போடப்பட்டு உள்ளதால், மக்கள் வரிப்பணம் 1.67 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவேற்காடு நகராட்சி, மேல் அயனம்பாக்கம் ஐந்தாவது வார்டில் 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்குள்ள மக்களின் பொழுதுபோக்கிற்காக பூங்கா அமைக்க, திருவேற்காடு நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.
அயனம்பாக்கம் கிராமத்தில் 4.25 ஏக்கர் பரப்பில் உள்ள பாட்டன் குளத்தை, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சீரமைத்து, பூங்கா அமைக்க 2022ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்காக 1.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துார் வாரி, நடைபயிற்சி மேற்கொள்ள பாதை அமைத்து, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. ஆறு மாதங்களில் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்குபின் பணிகள் மேற்கொள்ளப்படாமல், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது.
அதை சீரமைக்க, மீண்டும் குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் வரையாவது செலவாகும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து, சமூக ஆர்வலர் சஞ்ஜோன் கூறுகையில், ''நகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், பூங்காவில் பணிகள் முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருந்தால், மீண்டும் நிதி ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்காது. இதனால், மக்களின் அடிப்படை தேவைக்கான திட்டங்கள், கிடப்பில் போடப்படும் நிலை உருவாகிறது,'' என்றார்.