/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'டிஜிட்டல்' முறைக்கு மாறியும் நோயாளிகள்... பரிதவிப்பு மருத்து, மாத்திரை வாங்க முடியாத அவலம்
/
'டிஜிட்டல்' முறைக்கு மாறியும் நோயாளிகள்... பரிதவிப்பு மருத்து, மாத்திரை வாங்க முடியாத அவலம்
'டிஜிட்டல்' முறைக்கு மாறியும் நோயாளிகள்... பரிதவிப்பு மருத்து, மாத்திரை வாங்க முடியாத அவலம்
'டிஜிட்டல்' முறைக்கு மாறியும் நோயாளிகள்... பரிதவிப்பு மருத்து, மாத்திரை வாங்க முடியாத அவலம்
PUBLISHED ON : அக் 16, 2025 12:00 AM

அரசின் தலைமை மருத்துவமனையாக செயல்படும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை பணிகள், 'டிஜிட்டல்' முறைக்கு மாறினாலும், மருந்து, மாத்திரை வாங்க முடியாமல், நோயாளிகள் பரிதவிக்கும் நிலை தொடர்கிறது.
தமிழக அரசின் தலைமை மருத்துவமனையாக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி 12,000 புறநோயாளிகள், 3,000க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் என, 45,000 பேர் வரை மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர்.
தமிழகம் முழுதும் இருந்து நோயாளிகள் இங்கு உயர் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
புதுநடைமுறை
இதற்குமுன், புறநோயாளிகளுக்கு பதிவு சீட்டு வழங்கப்படும். அந்த சீட்டை வைத்து, நோயாளிகள் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவர். டாக்டரும், மருந்து, மாத்திரைகளை சீட்டில் எழுதி தருவார்.
தொழில்நுட்ப வளர்ச்சியால், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில், டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டன. ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், புறநோயாளிகள் பதிவு முதல் டாக்டர்கள் ஆலோசனை வழங்கி, மருந்து, மாத்திரை பரிந்துரைப்பது வரை, கணினி முறைக்கு மாற்றப்பட்டு விட்டது.
தற்போது, புறநோயாளிகள் அட்டையில் உள்ள க்யூ.ஆர்., குறியீடு பெற்று, டாக்டரிடம் சென்றால், உடல்நிலையை கேட்டறிந்து, கணினியிலேயே மருந்து, மாத்திரைகளை பரிந்துரை செய்கின்றனர். மருந்தகங்களில் சென்று அட்டையை காண்பித்து மருந்துகளை பெறலாம்.
இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள இதயவியல் துறையில், கணினி இல்லாததால், டாக்டர் வழக்கமான சீட்டில் மருந்து எழுதி கொடுக்கின்றனர்.
சீட்டை காட்டி மருந்து கேட்டால், கணினியில் பதிவேற்றாமல், மருந்துகள் தரமுடியாது என, அந்நோயாளிகளை, ஊழியர்கள் விரட்டிவிடும் அவலம் நடந்து வருகிறது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட நோயாளி ஒருவர் கூறியதாவது:
மூன்று ஆண்டுகளுக்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். மாதந்தோறும், டாக்டரிடம் பரிசோதித்து மருந்து, மாத்திரை பெற்று வருகிறேன்.
நேற்று முன்தினம் காலை 9:30 மணிக்கு டாக்டரை சந்தித்தேன். பல துறை டாக்டர்களை சந்தித்து, ஆங்காங்கே மருந்தகங்களில் மருந்துகளை பெற்றேன்.
இதய டாக்டர், துண்டு சீட்டில் மருந்துகளை எழுதி கொடுத்தார். அந்த சீட்டை மருந்தகத்தில் கொடுத்தால், மருந்து தர மறுத்துவிட்டனர்.
'டாக்டரிடம் சென்று கணினியில் பதிவேற்றச் சொல்லுங்கள்' என்றனர். டாக்டரிடம் சென்றால், 'இங்கு கணினி இல்லை; சீட்டை வைத்து மருந்து வாங்கி கொள்ளுங்கள்' என, அனுப்பிவிட்டனர்.
மீண்டும் மருந்தகம் சென்றாலும், எனக்கு மருந்து தர மறுத்துவிட்டனர். அதற்குள் பகல் 1:00 மணியை கடந்துவிட்டது. அலையாய் அலைந்தப்பின், மற்றொருவரின் உதவியுடன், உள்நோயாளிகள் வார்டில் இருந்து, டாக்டர் எனக்கு மருந்தை எடுத்து தந்தார்.
கணினி இல்லை என்றாலும், டாக்டர் தான் மருந்தை சீட்டில் எழுதி தருகிறார். வயதானவன் என்றுகூட பார்க்காமல், டாக்டர்களும், மருந்தாளுனர்களும் நோயாளிகளை அலையவிடுவது வாடிக்கையாக உள்ளது.
தமிழகத்தின் தலைமை மருத்துவமனையில்தொடரும் குளறுபடிக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குளறுபடி இனி நடக்காது இதய சிகிச்சை பிரிவு, பழைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. அவற்றை மாற்றும் பணி நடந்து வருகிறது. அங்கு, இணையதள தொடர்பு ஏற்படுத்த முடியாததால், கணினி பயன்பாடு இல்லை. இதுபோன்ற நேரங்களில், டாக்டர் கொடுக்கும், மருந்து சீட்டை வைத்து, மருந்து கொடுக்கும்படி, மருந்தகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எங்கு தவறு நடந்தது என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற குளறுபடி இனி நடக்காமல் பார்த்து கொள்ளப்படும். - சாந்தராம், முதல்வர் ராஜிவ்காந்தி மருத்துவமனை
- நமது நிருபர் -