UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 08:56 PM

ஆவடி: பட்டாபிராமில் எட்டு ஆண்டுகளாக நடைபெறும் மேம்பாலத்தின் இறுதிக்கட்ட பணிகள் மந்தமாக உள்ளதால், திறப்பு தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை - திருவள்ளூர் மாவட்டங்களை இணைக்கும் பட்டாபிராம் சி.டி.எச்., சாலையில் உள்ள எல்.சி., கேட் - 2 கடவுப்பாதை, 45 நிமிடங்களுக்கு ஒருமுறை மூடப்பட்டு வந்தது. பட்டாபிராம் 'சைடிங்' மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண, மத்திய, மாநில அரசுகள் இணைந்து, 2018ல் 78.31 கோடி ரூபாய் மதிப்பில் ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டன.
நிலம் கையகப்படுத்துதல், கொரோனா தொற்று, இயற்கை பாதிப்புகள் உள்ளிட்ட காரணங்களால் கட்டுமானம் தாமதமானது. பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, கடந்த ஆண்டு செப்., 25ல் ஒரு வழிப்பாதை பயன்பாட்டுக்கு வந்தது. தொடர்ந்து, திருவள்ளூர் - சென்னை மார்க்கத்தில் ரயில்வே சார்பில் 8 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட இறுதிக்கட்ட கட்டுமான பணியும் நிறைவடைந்தது.
தற்போது மேம்பாலம் சுத்தம் செய்தல், தடுப்பு அமைத்தல், வர்ணம் பூசுதல், போக்குவரத்து குறியீடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் மந்தமாக நடக்கின்றன. கடந்த ஆகஸ்டில் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பணிகள் தாமதமாவதால் மேலும் ஒரு மாதம் நீளும் நிலை ஏற்பட்டுள்ளது. ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பணிகளை விரைந்து முடித்து மேம்பாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
