/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையை கடக்க 5 வினாடி பாதசாரிகள் திக்... திக்!
/
சாலையை கடக்க 5 வினாடி பாதசாரிகள் திக்... திக்!
ADDED : ஜூலை 16, 2025 12:25 AM

சென்னை,சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள சிக்னலில், சாலையை கடக்க 5 நொடிகள் மட்டுமே ஒதுக்கப்படுவதால், பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக, முதியோர் சாலையை கடப்பதில் சிரமம் ஏற்படுவது மட்டுமின்றி, அவ்வழியே செல்லும் வாகனங்களில் அடிபட்டு, காயமடையும் சம்பவமும் நடந்து வருகிறது.
இதுகுறித்து பாதசாரிகள் கூறியதாவது:
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள சிக்னலில், பாதசாரிகள் சாலையை கடப்பதற்கென, 12 வினாடிகள் ஒதுக்கப்பட்டதாக, சிக்னல் திரையில் காட்டப்படுகிறது.
ஆனால், 5 வினாடிகளிலேயே பச்சை நிற விளக்கு எரிவதால், வாகனங்கள் சீறி பாய்கின்றன. வாலிபர்களால்கூட 5 வினாடிகளில் அந்த சாலையை கடக்க முடியாதபோது, முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகளால் எப்படி கடக்க முடியும். இதனால், அப்பகுதியை கடப்பதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.
உயிரிழப்பு ஏற்படும் முன், சாலையை கடப்பதற்கு தேவையான வினாடிகளை சிக்னலில் ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

