/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உள்வாங்கும் நடைபாதை பாதசாரிகள் சிக்கி பாதிப்பு
/
உள்வாங்கும் நடைபாதை பாதசாரிகள் சிக்கி பாதிப்பு
ADDED : செப் 03, 2025 12:21 AM

திருவான்மியூர் :டைடல் பார்க் சந்திப்பில் இருந்து, திருவான்மியூர் நோக்கி செல்லும் சாலையில், மிகவும் சேதமடைந்து உள்வாங்கியுள்ள நடைபாதையில் சிக்கி பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஓ.எம்.ஆர்., டைடல் பார்க் சந்திப்பு சுற்றுவட்டார பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. இங்கு வேலை செய்வோர், ரயில் மற்றும் பேருந்துகளை பயன்படுத்துகின்றனர்.
பேருந்தில் செல்ல, திருவான்மியூர் நோக்கி செல்லும் சாலையில் உள்ள நடைபாதை வழியாக, எல்.பி., சாலை பேருந்து நிறுத்தம் மற்றும் திருவான்மியூர் பேருந்து நிலையம் செல்கின்றனர்.
அந்த பகுதிக்கு பிரதான நடைபாதையாக உள்ளதால், சாலை அகலத்திற்கு ஏற்ப டைல்ஸ் பதித்து, வாகனங்கள் நடைபாதையில் ஏறி செல்லாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நடைபாதை, சில இடங்களில் உள்வாங்கி, டைல்ஸ் பெயர்ந்துள்ளது. இதில் நடந்து செல்வோர், அடிக்கடி தடுக்கிவிழும் நிலை ஏற்படுகிறது. மேலும், மழைநீர் வடிகால்வாய் மூடியும் சேதமடைந்துள்ளதால், இரவில் பாதசாரிகள் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
இதனால், இரும்பு தடுப்பில் உள்ள ஒரு பகுதியை ஓட்டைக்குள் நுழைத்து, போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர். பருவமழையின் போது, நடைபாதை மேலும் சேதமடையும் நிலை ஏற்படும்.
அப்போது, பெரிய அளவில் அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, நடைபாதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.