/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாக்கடை அள்ளவைத்த நிறுவனத்திற்கு அபராதம்
/
சாக்கடை அள்ளவைத்த நிறுவனத்திற்கு அபராதம்
ADDED : செப் 20, 2024 12:26 AM
சென்னை, கோயம்பேடு அங்காடி வளாகத்தில், பாதாள சாக்கடை இயந்திரக் குழியில் மனிதர்களை இறக்கியதாக, ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பான செய்தி நம் நாளிதழில், படத்துடன் நேற்று வெளியானது.
இது தொடர்பாக சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்ட அறிக்கை:
கடந்த, 17ல் கோயம்பேடு உணவு தானிய அங்காடி வளாகத்தில், கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டதாக புகார் வந்தது. இதுகுறித்து, பராமரிப்பு பணி ஒப்பந்தம் எடுத்த, 'சிவிடி என்டர்பிரைசஸ்' நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்நிறுவனத்தைச் சேர்ந்தோர், பாதாள சாக்கடை குழிகளில் இயந்திரங்களுக்கு பதில் மனிதர்களை இறக்கி அடைப்பு நீக்கும் பணிகளை மேற்கொண்டது, கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக தெரியவந்தது.
இதையடுத்து, கைகளால் கழிவை அகற்றும் பணியில் துப்புரவாளர்களை அமர்த்துவதை தடை செய்யும், 2013ம் ஆண்டு சட்ட விதிமுறைகளை மீறியதற்காக, அந்த ஒப்பந்த நிறுவனம் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்நிறுவனத்துக்கு, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.